RM Veerappan Passed Away: எம்.ஜி.ஆரின் வலதுகரம் ஆர்.எம்.வீரப்பன் காலமானார் - முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
RM Veerappan Passed Away: ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராக பதவி வகித்த ஆர்.எம்.வீரப்பன் இன்று முதுமை மற்றும் உடல்நல குறைவால் காலமானார்.
எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராக பதவி வகித்த ஆர்.எம்.வீரப்பன்(RM Veerappan) இன்று முதுமை மற்றும் உடல்நல குறைவால் காலமானார்.
எம்.ஜி.ஆரிடம் மேலாளராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவிஸ் பட நிறுவனம் தொடங்கி பல வெற்றி படங்களை தயாரித்தவர். மேலும், ரஜினிகாந்த் நடித்து பெரும் வெற்றிபெற்ற பாட்ஷா படத்தை தயாரித்தவரும் ஆர்.எம்.வீரப்பன்தான்.
எம்.ஜி.ஆர் மட்டுமின்றி சிவாஜி, ரஜினி, கமல், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் சத்யா மூவிஸ் தயாரித்துள்ளார். எம்.ஜி.ஆர் நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்ஷாக்காரன் படங்களை தயாரித்தவர். தொடர்ந்து, ரஜினிகாந்த் நடித்த மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களும், சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
அரசியல் களம்:
அமெரிக்காவில் எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்று வந்தபோது அவரது வீடியோவை வெளியிட்டு அதிமுக வெற்றிக்கு வித்திட்டவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் ஜானகி, ஜெ.அணிகள் இணைந்ததும் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆனார். திருநெல்வேலி, காங்கேயம் தொகுதிகளில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். மேலும், சட்ட மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார் ஆர்.எம்.வீரப்பன்.
தமிழ்நாடு அரசில் கல்வி, உணவு, சுற்றுலா மற்றும் அறநிலையத்துறைகளுக்கு அமைச்சராக பதவி வகித்தவர். நாடோடி மன்னன் படத்தின் மூல பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடலாசிரியராக அறிமுகமாக உதவியவர். கலைஞருடன் நெருங்கி பழகி வந்த ஆர்.எம்.வீரப்பன் முதலமைச்சர் ஸ்டாலிடனும் நட்புடன் இருந்து வந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்:
திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனருமான திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன்.
அவரது 98ஆவது பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி நேரில் அவரது இல்லத்திற்கே சென்று அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த நினைவுகள் நிழலாடுகின்றன. அரசியலில் மட்டுமின்றி, திரைத்துறையிலும் வரலாற்று முத்திரையைப் பதித்துள்ள திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள், நூறாண்டுகளும் கடந்து நிறைவாழ்வு வாழ்வார் என்ற எம் போன்ற அவரது நலம் விரும்பிகளின் எதிர்பார்ப்பு, எதிர்பாராத விதமாக நிறைவேறாமல் போயிருப்பது வருத்தமளிக்கிறது.
ஆர்.எம்.வீ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முத்தமிழறிஞர் கலைஞர் என அனைத்து தலைவர்களுடனும் நெருக்கமும், நட்பும் கொண்டிருந்தவர். எம்.ஜி.ஆரின் மனச்சாட்சியாகவும், நிழலாகவும் கருதப்பட்ட ஆளுமையாக அரசியலில் வலம் வந்தவர். அவரது அமைச்சரவையில் இடம்பெற்று செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் பணியாற்றிப் புகழ் பெற்றவர்.
பின்னாளில், எம்.ஜி.ஆர். கழகம் என்று தமக்கென தனி இயக்கம் கண்டாலும், திராவிட முன்னேற்றக் கழகத்துடனும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞருடனும் அரசியல் ரீதியாக மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் நல்லுறவையும், நட்பையும் பேணி வந்தார். அதே அன்பையும், பரிவையும் என்னிடத்திலும் அவர் காட்டி வந்தார்.
எம்.ஜி.ஆர் அவர்களின் சத்யா மூவீஸ் நிறுவனத்தைத் திறம்பட நிர்வகித்து தமிழ்த்திரையுலகிற்கு பல்வேறு வெற்றிப் படங்களைத் தந்த சிறந்த தயாரிப்பாளராகவும் அவர் திகழ்ந்தார். அத்துடன், அவரது தமிழ்ப் பற்று காரணமாக சென்னை கம்பன் கழகத்திற்கும் தலைவராகப் பொறுப்பேற்று, இலக்கியத்துறையிலும் தனது தடத்தைப் பதித்தார். அத்துடன், ஆழ்வார்கள் ஆய்வுமையம் என்ற அமைப்பின் தலைவராகப் பணியாற்றி, ஆன்மீகத்துறையிலும் ஈடுபாடு கொண்டவராக அவர் இருந்து வந்தார்.
அரசியல், திரைத்துறை, தமிழ்த்துறை, ஆன்மீகம் என்று அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்த ஆர்.எம்.வீரப்பன், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினராலும் விரும்பப்படும் பேராளுமையாகத் திகழ்ந்தார்.
ஆர்.எம்.வீரப்பன் அவர்களது மறைவு, அரசியல் உலகிற்கு மட்டுமின்றி, அவர் இயங்கி வந்த திரையுலம், இலக்கியம், ஆன்மீகம் உள்ளிட்ட அனைத்துறைகளுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது துணைவியார், குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட இயக்கம் இருக்கும் வரை திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் புகழும் நிலைத்திருக்கும்!