Annamalai: சாட்டர்ஜி, ராவத் வரிசையில் சிக்கும் செந்தில் பாலாஜி ? அமலாக்கத்துறை விசாரணை பற்றி பேசிய அண்ணாமலை..!
அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை விரைவில் அமலாக்கத்துறையினர் விசாரிப்பார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை விரைவில் அமலாக்கத்துறையினர் விசாரிப்பார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அன்புசெழியன், கலைப்புலி எஸ். தானு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா உள்ளிட்ட பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், பைனான்சியர்களின் வீடு, அலுவலகங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அண்ணாமலை இந்த கருத்தை தெரிவித்துள்ளது அரசியல் களத்தில் அனலை கிளப்பியிருக்கிறது.
ஏற்கனவே, ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, நில மோசடி வழக்கில் சிவசேனா மூத்த தலைவரும் அக்கட்சியின் எம்.பியுமான சஞ்சய் ராவத் ஆகியோரை அமலாக்கத்தை அதிரடியாக கைது செய்துள்ள நிலையில், செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விரைவில் விசாரணை நடத்தும் என்று அண்ணாமலை பேட்டி அளித்திருப்பது கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகார் அமலாக்கத்துறை வசம் இருக்கும் நிலையில், இந்த வழக்கில் செந்தில்பாலாஜி விசாரிக்கப்பட்டால், அவரை அமலாக்கத்துறை கைது செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை கணக்கில் கொண்டே செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை விரைவில் விசாரிக்கும் என அண்ணாமலை பேசியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், கடந்த திமுக ஆட்சியின்போது ஐபிஎஸ் அதிகாரிக்கு முறைகேடாக வீடு ஒதுக்கிய விவகாரத்தில் அன்றைய வீட்டு வசதித்துறை அமைச்சரும் இன்றைய கூட்டுறவுத்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை கடந்த சில நாட்களுக்கு முன் எட்டு மணி நேரம் விசாரணை நடத்தியது.
இப்போது, செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தும் என திட்டவட்டமாக அண்ணாமலை தெரிவித்திருப்பதால், விரைவில் செந்தில்பாலாஜிக்கு சிக்கல் வரும் என்கின்றனர் பாஜகவினர்.
அதேபோல், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற சுயேட்சையான விசாரணை அமைப்புகளை மத்திய பாஜக அரசு அரசியல் பழிவாங்களுக்காக பயன்படுத்துவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது சர்ச்சையையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்