மின்சாரத்துறை குறித்து சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்பினால் நடவடிக்கை - அமைச்சர் செந்தில் பாலாஜி
பாஜக ஆளும் மாநிலங்களில் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்வதற்காக செயற்கையான மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறதா? என்பதை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெளிவுபடுத்த வேண்டும்
கரூரில் அமைந்துள்ள பழைய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வி.செந்தில் பாலாஜி,
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மீண்டும் செயல்படுவதற்காக 20 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆணை நேற்று சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மருத்துவமனையில் நேரில் பார்வையிட்டோம்.
நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என்று கூற முடியாது. அதேசமயம் தேவையான அளவிற்கு நிலக்கரி ஏற்பாடு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இனி எப்போதும் தமிழகத்தில் மின் விநியோகம் சீராக இருக்கும். தமிழகத்தில் 500 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கையிருப்பில் உள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி பற்றாக்குறை என்பது இந்தியா முழுவதும் உள்ளது.
ஏற்கனவே, தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்ட 2030 மெகாவாட் நிலக்கரி தற்போது கையிருப்பில் இல்லை. அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் உற்பத்தி மையங்களில் நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் 3,000 மெகாவாட் மின்சாரம் பெறுவதற்கான டெண்டர் விடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. நம்மிடம் நிலக்கரி என்பது அன்றைய தேவைக்கு மட்டுமே உள்ளது. தினசரி மின் தேவைக்கு ஏற்ப கொண்டுவந்து சமாளிக்கும் வகையில் 24 மணிநேரமும் மின் வாரியம் செயல்பட்டு வருகிறது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருந்தும், மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பேட்டி கொடுத்தார். அவர் பேட்டி கொடுத்த அன்றைய தினமே செய்தியாளர்களை சந்தித்து நிலக்கரி கையிருப்பு எவ்வளவு இருந்தது என்பது குறித்து முறையான விளக்கம் கொடுத்தேன்.
தமிழ்நாட்டை குறைசொல்லும் அதேநேரம், பாஜக ஆளும் மாநிலங்களில் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்வதற்காக செயற்கையான மின்வெட்டு ஏற்படுகிறதா? என்பதை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெளிவுபடுத்த வேண்டும். மேலும், மின்வெட்டு குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களையும், அவதூறு பரப்பும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.