5 மாநில சட்டசபை தேர்தல் : தமிழகத்தில் அதிகபட்சமாக ரூ.445.81 கோடி பறிமுல்
நாடு முழுவதும் நடைபெற்ற 5 மாநில தேர்தல்களில், மொத்தமாக ரூ.947 கோடியே 98 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்தான் அதிகபட்சமாக ரூ. 445.81 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. மேலும், அசாம் மாநிலத்தில் மூன்றாம் மற்றும் இறுதி கட்டமாகவும்,, மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அந்தந்த மாநிலங்களில் அமலுக்கு வந்தது. மேலும், போலீசாரும், தேர்தல் பறக்கும் படையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடத் தொடங்கினர்.
இந்த நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகை, பரிசுப்பொருட்கள் ஆகியவற்றின் மதிப்பு பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி, கேரளாவில் ரொக்கமாக ரூ 22.64 கோடியும், ரூ.5.01 கோடி மதிப்பிலான மதுபாட்டில்கள் உள்பட மொத்தம் ரூ.82.84 கோடி மதிப்பிலான பணம், நகை, பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியில் ரொக்கமாக ரூ.5.45 கோடி, ரூ.70 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் என மொத்தம் ரூ.36.89 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் ரொக்கமாக ரூ.26.29 கோடியும், ரூ.39.34 கோடி மதிப்பிலான மதுபாட்டில்கள் உள்பட மொத்தமாக ரூ.119.29 கோடி மதிப்பிலான பணம், மதுபாட்டில்கள், பரிசுப்பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ரொக்கமாக ரூ.40.27 கோடியும், ரூ.23.52 கோடி மதிப்பிலான மதுபாட்டில்களும் உள்பட இதர பரிசுப்பொருட்கள் ஆகியவற்றையும் சேர்த்து மொத்தமாக ரூ.263.15 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபாட்டிகள், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில்தான் அதிகபட்சமாக ரொக்கமாக ரூ.236.51 கோடி, ரூ.5.24 கோடி மதிப்பிலான மதுபாட்டில்கள் உள்பட மொத்தம் ரூ.445.81 கோடி மதிப்பிலான பணம், மதுபாட்டில்கள், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட 5 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தமாக ரூ.947 கோடியே 98 லட்சம் மதிப்பிலான பணம், மதுபாட்டில்கள், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.