Rahul Gandhi ECI: என்னா வேகம்..! குடுகுடுவென ஓடிவந்த தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி பொய் சொல்வதாக ஆவேசம்
Rahul Gandhi ECI: வாக்கு திருட்டு நடவடிக்கைகளை பாதுகாப்பதே தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தான் என, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Rahul Gandhi ECI: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள்:
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான தாக்குதலை முன்வைத்துள்ளார். இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், இந்திய ஜனநாயகத்தை அழிப்பவர்களை தேர்தல் ஆணையம் பாதுகாப்பதாகவும், இந்திய ஜனநாயகத்தை அழித்த மக்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரே பாதுகாத்து வருகிறார் என்றும் காந்தி குற்றம் சாட்டினார்.
”ஆதாரங்கள் இன்றி பேசவில்லை”
ஆதாரங்கள் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைக்க மாட்டேன் என்று பேசி, "100 சதவீத உண்மையால் ஆதரிக்கப்படாத எதையும் நான் இந்த மேடையில் சொல்லப் போவதில்லை. நான் என் நாட்டை நேசிக்கும் ஒருவர், என் அரசியலமைப்பை நேசிக்கிறேன், ஜனநாயக செயல்முறையை நேசிக்கிறேன், அந்த செயல்முறையை நான் பாதுகாக்கிறேன். நீங்கள் தீர்மானிக்கக்கூடிய 100% ஆதாரத்தின் அடிப்படையில் இல்லாத எதையும் நான் இங்கு சொல்லப் போவதில்லை. நான் சொன்ன ஹைட்ரஜன் குண்டு இதுவல்ல, அது பின்னர் வரும்” என ராகுல் காந்தி தெரிவித்தார்.
”வாக்காளர்கள் நீக்கம்”
கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் "தவறான அடையாளங்களை கொண்ட தொலைபேசி எண்கள், மென்பொருள் கையாளுதல் மற்றும் போலி விண்ணப்பங்கள்" மூலம் 6,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியல்களிலிருந்து நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியாமல் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படுவதாகவும், தவறு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் ராகுல் காந்தி சாடினார். மேலும், மகாராஷ்டிராவின் ராஜ்புரா தொகுதியில் தேர்தல்களின் போது 6,850க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும், போலி பெயர்கள் மற்றும் முகவரிகளைப் பயன்படுத்தி போலி வாக்காளர்களை உருவாக்கியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் தேர்தல் செயல்முறையின் புனிதத்தைப் பாதுகாப்பது நாட்டின் ஜனநாயகத்திற்கு இன்றியமையாதது என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
தேர்தல் ஆணையம் மறுப்பு:
ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை முன்வைத்த அடுத்த சிறிது நேரத்திலேயே, இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ட்விட்டர் பதிவில் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,
- ராகுல் காந்தி தவறாக குறிப்பிடுவது போல, எந்தவொரு வாக்காளரையும் ஆன்லைம் மூலமாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முடியாது.
- 2023 ஆம் ஆண்டில், ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களை நீக்குவதற்கு சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிந்தன. இந்த விஷயத்தை விசாரிக்க தேர்தல் ஆணையமே வழக்குப்பதிவு செய்துள்ளது.
- தரவுவுகளின்படி, ஆலந்து சட்டமன்றத் தொகுதியை 2018 இல் சுபாத் குட்டேதரும் (பாஜக) 2023 இல் பி.ஆர். பாட்டீலும் (INC) வெற்றி பெற்றனர்” என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.





















