EPS: சர்வே எடுக்கப்போகும் எடப்பாடியார்.. இபிஎஸ் ஏன் இப்படி பண்றாரு தெரியுமா?
சட்டமன்ற தேர்தலுக்காக தற்போது வரை 150 தொகுதிகளில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி ரகசிய சர்வே எடுக்க முடிவு செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக என பல கட்சிகள் உள்ளனர். ஆளுங்கட்சியான திமுக-வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர்.
150 தொகுதிகளில் பரப்புரை:
பல கட்ட சவால்களுக்கு பிறகு இந்த தேர்தலை எதிர்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அடுத்தாண்டு நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் முதன்முதலில் பரப்புரையைத் தொடங்கியவர். தேர்தலுக்கு இன்னும் 10 மாதம் உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தற்போதே 150 தொகுதிகளில் தனது பரப்புரையை முடித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தொகுதிகளில் எல்லாம் அவருக்கு அதிமுக சார்பிலும், மக்கள் சார்பிலும் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டு வருவது அவருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும், ஆளுங்கட்சியான திமுக-வின் பலம், புதிய அரசியல் வரவான விஜய்யின் தவெக தாக்கம், உட்கட்சியில் ஓ.பி.எஸ்., செங்கோட்டையன், சசிகலா, தினகரன் ஆகியோரின் நெருக்கடி ஆகியவை காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு வரும் சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.
சர்வே எடுக்கப்போகும் எடப்பாடி:
இதனால், இதுவரை பரப்புரை மேற்கொண்ட 150 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி சர்வே நடத்த திட்டமிட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றின் மூலமாக சர்வே மேற்கொள்ள அவர் முடிவு செய்துள்ளார். அதில் திமுக மீதான அதிருப்தி, அதிமுக மீதான மக்களின் எண்ணங்கள், விஜய் மீதான கருத்து ஆகியவை குறித்து தெரிந்து கொள்ள அவர் முடிவு செய்துள்ளார். இந்த சர்வே தரும் முடிவைப் பொறுத்து தனது அடுத்தகட்ட வியூகங்களையும் எடப்பாடி பழனிசாமி வகுக்க உள்ளார்.
தமிழ்நாட்டின் அரசியல் களம் மிகுந்த பரபரப்பாகவும், சவாலானதாகவும் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக மாறியுள்ளது. தற்போது, அதிமுக கூட்டணியில் பாஜக, தமாக கட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

பாமக-வுடனும், தேமுதிக-வுடனும் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அவர்கள் இன்னும் கூட்டணிக்குள் அதிகாரப்பூர்வமாக வரவில்லை. இன்னும் கட்சியின் பல தொண்டர்கள் பாஜக-வை கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டு விஜய்யின் தவெக-வை கூட்டணிக்குள் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
15 ஆயிரம் கி.மீட்டர் சுற்றுப்பயணம்:
கட்சியிலும், கூட்டணியிலும் பல சவால்களை எதிர்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி இந்த சர்வே-வின் முடிவுகளை பொறுத்து அடுத்த கட்ட நகர்வுகளையும், முக்கிய முடிவுகளையும் எடுக்க தயாராகி வருகிறார். எடப்பாடி பழனிசாமி கடந்த 52 நாட்களில் 153 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதாவது, சுமார் 15 ஆயிரம் கி.மீட்டர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தேர்தலுக்காக கட்சியின் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சுறுசுறுப்பாக பணியாற்றவும் உத்தரவிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி இதுவரை கோவை, திருப்பூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





















