Edappadi Palaniswami : ”71வது வயதில் எடப்பாடி பழனிசாமி” 2026ல் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா..?
”எடப்பாடி பழனிசாமி அடித்து ஆடிய ஆட்டத்தில் வீழ்ந்த சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் உள்ளிட்டோர் இன்னும் அந்த அதிர்வில் இருந்து எழவேயில்லை”

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி இன்று தன்னுடைய 71 வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும், ஜெயலலிதா என்ற மிகப்பெரிய தலைவரின் இறப்புக்கு பிறகு 4 ஆண்டுகள் வெற்றிக்கரமாக ஆட்சியை தக்க வைத்தது, தடைகளை எல்லாம் ஒன்றை ஆளாய் எதிர்த்து நின்று தகர்த்து, அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தின் ஒன்றைத் தலைமையாக, பொதுச்செயலாளராக ஆனது என அவரது முயற்சிகள் வரலாற்றில் சாதனைகளாக மாறிப்போயிருக்கின்றன.
எடப்பாடி சந்திக்காத நெருக்கடிகள் இல்லை
அதிமுகவை உருவாக்கிய எம்.ஜி.ஆரும், அதன் பின்னர் கட்சியை வளர்த்தெடுத்த ஜெயலலிதாவும் மக்கள் தலைவர்கள். அவர்களின் செல்வாக்கு என்பது இயற்கையாகவே அமைந்தது. அதற்கான ஆளுமையும் வசீகரத்தன்மையும் அவர்கள் இருவரிடமும் இருந்தது. ஆனால், அதிமுக அமைச்சரவையில் அங்கம் வகித்த, அதிகம் பேசவும், பார்க்கவும் படாத ஒருவர் அதிமுகவிற்கு தலைமையேற்பார் என்று அந்த இயக்கம் நினைத்துக் கூட பார்த்திருக்காது. ஆனால், அது நடந்தது. தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு சந்திகாத நெருக்கடிகள் இல்லை.
கட்சிக்குள்ளேயேயும் வெளியிலும் அவருக்கு வந்த எதிர்ப்புகளையெல்லாம் தன்னுடைய சாந்தமான குணத்தால் ஆறப்போட்டு அடித்தார். ஒரு கட்டத்தில் அவரை எதிர்த்து நிற்கவோ, பேசவோ கூட கட்சியில் இருவர் கூட இல்லாத நிலை உருவானது. அவர் ஆடிய ஆட்டத்தில் சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் என்ற மிகப்பெரிய பிம்பங்கள் எல்லாம் சல்லி, சல்லியாக நொறுங்கி விழுந்தன. அவர்களால் இப்போது வரை அந்த அடியில் இருந்து மீண்டு வரமுடியவில்லை.
திட்டங்களை அறிவித்த பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ஆட்சியில் பொங்கல் பரிசாக 2 ஆயிரத்து 500 ரூபாயை நியாய விலைக் கடைகள் மூலம் அளித்தது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, அம்மா மினி கிளினின், மகளிருக்கு ஸ்கூட்டர், அரசு வேலை வாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு இரண்டு சதவிகிதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 3 சதவீதம் ஆக்கியது, கொங்கு மண்டல மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியது என அவரின் பல்வேறு முன்னெடுப்புகள் வெகுஜன மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி மீதான அபிப்பிராயத்தை மாற்றிக் காட்டியது.
அதிலும் குறிப்பாக, அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5% உள் ஒதுக்கீட்டை செயல்படுத்தி காட்டியது, நீண்ட கால கோரிக்கையாக இருந்த டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட விவசாய பகுதிகளாக அறிவித்தது, குடிமராமத்து திட்டம் மூலம் நீர் நிலைகளை தூர்வாரி, அகலப்படுத்தியது எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மிகப்பெரிய சாதனைகளாக மாறிப்போயின.
கிளைச் செயலாளர் முதல்வர் ஆன கதை
சேலம் மாவட்டம் அருகே சிலுவம்பாளையம் எனும் சிற்றூரில் அதிமுகவின் கிளைச் செயலாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ, எம்.பி., மாவட்ட செயலாளர், கொள்கைப் பரப்புச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர், அமைச்சர் என படிப்படியாக உயர்ந்து வந்து, தமிழ்நாட்டிற்கே முதலமைச்சர் ஆனவர்.
எந்த குடும்ப அரசியல் பின்புலபும் இன்றி, வாரிசு அரசியலின்றி தன்னுடைய உழைப்பையும் திறமையையும் மட்டுமே நம்பி முன்னேறி வந்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, தன் மீது வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களுக்கும் தன்னுடைய செயல்பாடுகளாலேயே பதிலளித்திருக்கிறார். தொடக்கத்தில் பொதுக்கூட்ட மேடைகளில் பேசவே திணறுபவர் எப்படி அதிமுகவை வழிநடத்தமுடியும் என்று கேட்டார்கள். ஆனால், இன்றோ எந்த வித குறிப்பும் இன்றி மேடைகளிலும் பத்திரிகையாளர்கள் சந்திப்புகளிலும் புள்ளி விவரங்களோடு பிளந்து கட்டி வருகிறார் அவர்.
அமித் ஷாவையே அதிர வைத்த எடப்பாடி
இந்தியாவின் மிகப்பெரிய கட்சி, மூன்றாவது முறையாக தொடர்ந்து மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் சர்வ வல்லமை படைத்த பாஜகவின் முக்கியமான தளபதியான அமித் ஷாவையே தன்னை தேடி வரவழைத்து கெத்து காட்டிய எடப்பாடி பழனிசாமிக்கு, வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் என்பது அவரது ஆளுமையை சோதிப்பதற்கான தேர்தல்.
அந்த தேர்தலில் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அதிமுகவை அமர வைக்க அவர் எடுத்தும் வரும் முயற்சிகள் எல்லாம் பலிக்குமா? அல்லது திமுகவே 2வது முறையாக ஆட்சியை தக்க வைக்குமா?என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





















