திமுக தலைவர் ஸ்டாலின், எம்ஜிஆர் புகழ்பாடுகிறார் என்றால் அது அதிமுகவுக்கு கிடைத்த பெருமை - இபிஎஸ்
திமுகவை பொறுத்தவரை குடும்பகட்சி, கார்ப்பரேட் கம்பெனி. அதில் எவ்வளவு முதல் போடுகிறார்களோ? அவ்வளவு பணம் வரும் என்று விமர்சனம் செய்தார்.
சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகி சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு விழா பேருரை ஆற்றினார். அப்போது அவர் பேசியது, “ஆளும் விடியா திமுக ஆட்சியில் மக்களுக்கு நன்மை இல்லை. இப்போது உள்ள முதல்வர் நாட்டு மக்களை பற்றி கவலை கொள்ளாமல் வீட்டு மக்களை பற்றிதான் சிந்திக்கிறார். தற்போது அதிமுக தொண்டன்தான் திமுகவை வழிநடத்தி செல்கின்றான். அதிமுக தொண்டன் எங்கு சென்றாலும் கோலூற்றி நிற்கிறான். அதிமுகவின் முன்னாள் நிர்வாகிகள் தான். தற்போது திமுகவில் 8 அமைச்சர்களாக உள்ளார்கள். திமுகவில் விசுவாசம் என்ற சொல்லுக்கு அர்த்தம் இல்லை.திமுகவில் காலம் முழுவதும் உழைத்தாலும் பதவி கிடைக்காது, கமிஷன் கொடுத்தால்தான் பதவி கிடைக்கும் எனறு விமர்சனம் செய்தார். மேலும் எம்ஜிஆர் பெயரை கூறினால்தான் வாக்கு கிடைக்கும் என்பதால் நமது கட்சி தலைவரை முதலமைச்சர் ஸ்டாலின் புகழ்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின், எம்ஜிஆர் புகழ்பாடுகிறார் என்றால் அது அதிமுகவுக்கு கிடைத்த பெருமை.
தற்போது எம்ஜிஆர் தனது பெரியப்பா ஸ்டாலின் கூறுகிறார். அவருக்கு எப்படியெல்லாம் தொல்லை தந்தீர்கள். மக்கள் உங்களை நம்பமாட்டார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் அதிமுகவின் சேர்ந்து விடும் நிலைகூட வரலாம் என்று கூறினார். திமுக ஆட்சியில் மக்கள் படும்பாடு ஏராளம். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. எங்கு பார்த்தாலும் போதைபொருட்கள் தாராளமாக கிடைக்கிறது. கொரோனா பாதிக்கப்பட்டு படிப்படியாக மீண்டுவரும் வேளையில் மின்கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு செய்துள்ளனர். திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்கிறார் ஸ்டாலின். அவர் எந்தவித காவல் பாதுகாப்பும் இல்லாமல் தனியாக வந்து மக்களை சந்தித்தால் உண்மை தெரியும். தமிழக முதலமைச்சர் மக்களைப் பற்றிய தெரியாத முதலமைச்சர். பொம்மை முதலமைச்சராக உள்ளார்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நல திட்டங்களை திமுக புறக்கணித்துவிட்டது.10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் தந்த திட்டங்கள் குறித்து விவாதம் செய்ய அழைத்தபோது இதுவரை பதில் இல்லை. அதிமுக சாதனை குறித்து வெளியான புத்தகங்களை வாங்கி படித்துபாருங்கள் தெரியும். பொய் வாக்குறுதி தந்து வெற்றிபெற்ற பின் மக்களை மறந்து விட்டனர்.ஏழை மக்களின் உதவி தொகை வழங்குவதற்கு அரசியல் பார்க்கக்கூடாது . நாட்டு மக்களுக்கு எவ்வளவு பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது. இதெல்லாம் பற்றி எல்லாம் கவலையில்லை. தன் மகன் நடித்த படம் எவ்வாறு ஓடிக்கொண்டுள்ளது என்பது குறித்து விசாரிக்கிறார். கலகத் தலைவன் திரைப்படத்தை பார்ப்பவர்கள் வெளியே வராமல் திரையரங்கை பூட்டி வைத்துவிட்டார்கள் யாரும் வெளியே செல்லக்கூடாது என்பதற்காக, பின்னர் திமுகவினர் மட்டுமே திரைப்படத்தை சென்று பார்த்து வருகிறார்கள். இப்படி இருந்தால் மக்களின் வயிறு எரியதானே செய்யும். திமுகவை பொறுத்தவரை குடும்பகட்சி, கார்ப்பரேட் கம்பெனி. அதில் எவ்வளவு முதல் போடுகிறார்களோ? அவ்வளவு பணம் வரும்” என்று விமர்சனம் செய்தார்.
மேலும், “உதயநிதி நிறுவனம் மூலம் திரைப்படத்தை வாங்கி வெளியிடுவது உள்ளிட்ட எந்த ஒரு தொழிலையும் விடுவதில்லை. பணம் சம்பாதிக்க சினிமாக்களை குறைவான விலைக்கு வாங்கி வெளியிடுகின்றனர். கொடுக்கவில்லை என்றால் அந்த திரைப்படத்தை திரையிட விடுவதில்லை. அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்துகொண்டு வருகிறார்கள். அடுத்தது அதிமுகவின் ஆட்சியை நிச்சயம் வரும். அப்போது திமுக எங்கெங்கு பணம் வாங்குகிறதோ அதை எல்லாம் தோண்டி எடுத்துவிடுவோம். திமுக ஆட்சியில் 18 மாதத்தில் கொள்ளையடித்த பணத்தை வைத்துக்கொண்டு படம் தயாரிப்பில் இருந்து வாங்கி வெளியிட்டு இருக்கிறீர்கள், மிகப்பெரிய மெகாஊழல் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் பேசினார். ஊழலுக்காக கலைக்கப்பட்ட கட்சி திமுக, அதிமுகவை விமர்சனம் செய்கிறது. அதற்கும் ஒரு தகுதி வேண்டும்” என்றும் கூறினார்.