'அதிமுகவில் கண்ணும் இமையும் போல இரட்டை தலைமை சிறப்பாக உள்ளது' -பொன்னையன்
சசிகலாவை ஒருபோதும் அதிமுகவிற்குள் அனுமதிக்கமாட்டோம் என அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையின் மகள் திருமண விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையேற்று மணமக்கள் நம்ரதா - கௌதம் ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்தனர். மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரையின் மகள் நம்ரதாவின் திருமணம் சேலத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அதிமுகவின் மூத்த உறுப்பினரும், கழக அமைப்புச் செயலாளருமான, முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் சசிகலாவை ஒருபோதும் அதிமுகவிற்குள் அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்த அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட சசிகலா கிடையாது; ஜெயலலிதா இருக்கும்போதே சசிகலாவையும், அவருடைய குடும்பத்தையும் வீட்டிலிருந்தே ஒதுக்கி வைத்திருந்ததாக தெரிவித்தார். மேலும் அதிமுகவின் உட்கட்சி தேர்தல் சட்ட விதிகளின் படி நடைபெறும்; இபிஎஸ்-ம் ஓபிஎஸ்-ம் அதிமுகவின் இரு கண்களாக உள்ளனர். அதிமுகவின் கண்ணும் இமையும் போல இரட்டைத் தலைமை செயல்பட்டு வருகிறது என்றார். அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டது சரியான முடிவு என்றும், அதிமுக தலைமை நிர்வாகிகள் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட முடிவு என்றார். அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்.
எதிர்வரும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற பொன்னையன், முன்னாள் அமைச்சர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாது என்றார். சாலையில் செல்லும் பலர் அதிமுக கொடியை பயன்படுத்துவது போலத்தான் சசிகலாவும் பயன்படுத்துகிறார் என சாடினார்.
இந்த திருமண விழாவில் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையேற்று மணமக்கள் நம்ரதா - கௌதம் ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்து, வாழ்த்தினர். இந்த திருமண விழாவில் அதிமுக அமைப்பு செயலாளர்கள் பொன்னையன், செம்மலை, அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கே.பி. அன்பழகன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், திண்டுகல் சீனிவாசன், உடுமலை ராதாகிருஷ்ணன், எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம், மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.