விஜய்லாம் ஆளே இல்ல.. மலையை பார்த்து நாய் குறைக்கும்.. ஆர்.எஸ்.பாரதி அட்டாக்.. பரபரப்பு பேச்சு!
R. S. Bharathi: "தேர்தல் எப்போது வந்தாலும் திமுக 200 இடங்களில் வெல்லும் ஆலந்தூரில் ஆர்.எஸ். பாரதி பேட்டி"

மலையைப் பார்த்து நாய் குறைப்பது போன்று தான் என விஜயை விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி
கிறிஸ்துமஸ் விழா
சென்னை அடுத்த ஆலந்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன், சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விசிக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி மற்றும் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்
விழா நிறைவடைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ். பாரதி, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று உறுதியாகத் தெரிவித்தார். பாஜக மற்றும் கூட்டணி குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "கருத்துள்ள கட்சிகள் கூட்டணி சேரலாம் என பாஜக கூறுவது அவர்களின் பலவீனத்தையே காட்டுகிறது. அமித்ஷா அல்லது மோடி என யார் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது. பாஜகவினர் சிலரைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள், ஆனால் தமிழ்நாடு அதற்கு ஒருபோதும் பலியாகாது.
திமுக மலை போன்றது
தேர்தல் நாளைக்கே வைக்கப்பட்டாலும் திமுக 200 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி," என்று கூறினார். திமுகவை எதிர்ப்பவர்கள் யார் என்பதையும், திமுக மக்களுக்காகச் செய்த நன்மைகளையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், "யார் கண்காட்சி நடத்துகிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். அவர் (விஜய்) கட்சி ஆரம்பித்துவிட்டதால் பேசிக் கொண்டிருக்கிறார்,
நாங்கள் அவரைப் பெரிதாக எடுத்துக்கொள்வது கிடையாது. இதைவிடப் பெரிய சவால்களை எல்லாம் எதிர்கொண்டு வெற்றிபெற்ற கட்சி திமுக. மலையைப் பார்த்து நாய் குறைத்தால் மலை ஒன்றும் குறைந்துவிடாது," என விமர்சித்தார். மேலும், ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டாலும் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என தெரிவித்தார்.
அரசியலில் நடித்துக் கொண்டிருந்த எச். ராஜா தற்போது சினிமாவில் நடிக்கச் செல்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் ஆர்.எஸ். பாரதி கிண்டலாகக் குறிப்பிட்டார்.





















