”விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ்?” தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க திமுக திட்டம் ?
வரும் 27ஆம் தேதி விஜய் தன்னுடைய முதல் கட்சி மாநாட்டை நடத்தவிருக்கும் நிலையில், அதற்குள் திரைத்துறையில் இருந்து விஜய்க்கு எதிரான குரல்கள் ஒலிக்கத் தொடங்கும் என கூறப்படுகிறது
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் வர இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் இருந்தாலும் தேர்தல் களம் முன்கூட்டியே சூடுப்பிடிக்க தொடங்கியிருக்கிறது. அதற்கு நடிகர் விஜயும் ஒரு முக்கிய காரணம் என்பதை சாதரணமாக மறுத்துவிடமுடியாது. விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாடு வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள நிலையில், அவருக்கு எதிரான வியூகத்தை இப்போதே திமுக செய்யத் தொடங்கியிருப்பதாக தெரிகிறது.
திமுவிற்கு விஜய் சவால் விடுவாரா ?
சினிமாவில் மட்டுமே நடித்துவிட்டு நேரடியாக கட்சித் தொடங்கியிருக்கும் விஜய், பட்டித் தொட்டியெல்லாம் கிளைகளை பரப்பி, ஆலமரமென விரிந்துக்கிடக்கும் திமுகவை எதிர்த்து நிற்க முடியுமா ? என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் அரசியலில் எதுவும் எப்போது வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்பதை அரிச்சுவடியில் இருந்து அறிந்த கட்சி திமுக. எனவே, விஜய் தேர்தலில் போட்டியிட்டாலும் அது ஆளுங்கட்சியாக தமிழ்நாட்டில் இருக்கும் திமுகவிற்கு ஏதோ ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனென்றால், ஆளுங்கட்சி எதுவும் செய்யவில்லை, ஒரு மாற்றத்தை கொடுங்கள் என்றுதான் விஜய் பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழல் அரசியல் களத்தில் இருக்கும். அப்படியிருக்கும் நிலையில், சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவான விஜய் எது பேசினாலும் அது மக்கள் மத்தியில் ஒரு சின்ன அதிர்வையாவது ஏற்படுத்தும் என்பதை அறியாதது அல்ல திமுக. எனவே, கட்சித் தொடங்கி, மாநாடு போட்டு, தேர்தலை சந்திக்கவிருக்கும் விஜய்க்கு எதிரான வியூகத்தை தொடக்கத்திலேயே எடுத்து, அவர் சினிமாவில் மட்டும்தான் ஹீரோ, அரசியலில் ஜீரோ என்பதை காட்ட திமுக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் பிரகாஷ் ராஜை வைத்து விஜயை விமர்சிக்க திமுக திட்டமா ?
இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவோடு இணக்கமாக இருந்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜை வைத்து விஜயை விமர்சிக்க திமுக திட்டமிட்டு வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திமுக தொடர்ந்து பாஜகவை கொள்கை ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் எதிர்த்து வரும் நிலையில், அதே போன்றதொரு எதிர்ப்பை பிரகாஷ்ராஜூம் தொடர்ந்து செய்து வருகிறார். அதோடு, கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிகழ்ச்சிகளிலும் நடிகர் பிரகாஷ்ராஜ் பங்கேற்றார். இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும் குறிப்பாக நடிகர் விஜய்க்கு எதிராகவும் பிரகாஷ்ராஜை களத்தில் இறக்கிவிட திமுக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
விஜய்க்கு எதிராக திரைப்பிரபலங்களா ?
அதே நேரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் மட்டுமின்றி, கடந்த கால தேர்தல்களில் விஜய்காந்துக்கு எதிராக நடிகர் வடிவேலுவை பிரச்சாரத்தில் இறக்கிய திமுக. இப்போது, விஜய் சார்ந்த அதே திரைத்துறையினரை வைத்து பிரச்சாரத்தில் அவரை விமர்சித்து நெருக்கடி கொடுக்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
குறிப்பாக, நடிகர் விஜய் திரைப்படங்களில் பணியாற்றி அவரை பற்றி நன்கு தெரிந்த நபர்கள், விஜயோடு கருத்து மோதல்கள் ஏற்பட்ட பிரபலங்கள் உள்ளிட்டோரை தேர்தல் நெருக்கும் நேரத்திலேயே களத்தில் இறக்கவிட திமுகவின் ஒரு தரப்பு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
மாநாடு நெருக்கத்திலேயே நெருக்கடியா ?
வரும் 27ஆம் தேதி விஜய் தன்னுடைய முதல் கட்சி மாநாட்டை நடத்தவிருக்கும் நிலையில், அதற்குள் திரைத்துறையில் இருந்து விஜய்க்கு எதிரான குரல்கள் ஒலிக்கத் தொடங்கும் என கூறப்படுகிறது. விஜயின் திரைத்துறை செயல்பாட்டை விமர்சித்து, அதே துறையை சேர்ந்த பலர் வெளிப்படையாக பேசவுள்ளதாகவும் அதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.