kanimozhi Supports Vijay : “விஜய்க்கு திமுக எம்.பி. கனிமொழி ஆதரவு” மாறுகிறதா தமிழக அரசியல் களம்..?
”விஜயின் நீட் பற்றிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்த கனிமொழி - என்ன சொன்னார் தெரியுமா ?”
நீட் தேர்வு தொடர்பாக நடிகர் விஜய் தெரிவித்த கருத்துக்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
உணவு திருவிழாவில் பங்கேற்ற கனிமொழி
தமிழ்நாடு அரசு மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR) & OfERR அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் சென்னை செம்மொழிப் பூங்காவில் 'ஊரும் உணவும்' என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழா நடைபெறுகிறது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு உணவு திருவிழாவைத் தொடங்கி வைத்தார்.
செம்மொழி பூங்காவில் 'ஊரும் உணவும், உணவுத் திருவிழா இன்று முதல் வரும் 7ம் தேதி வரை நடைபெறும், இத்திருவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம். இந்த திருவிழாவில் தற்போது தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை மற்றும் மியான்மார் புலம்பெயர்ந்தவர்கள் 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இங்கு இடம்பெறுகின்றன.
விழாவில் பேசிய கனிமொழி
விழாவில் பேசிய கனிமொழி எம்.பி: சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உணவுத் திருவிழா புலம்பெயர்ந்த மக்கள் அவர்களுடைய உணவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்ள இந்த திருவிழா இந்த ஆண்டும் நடைபெறுகிறது. சென்ற ஆண்டைவிட இன்னும் சிறப்பாக மக்களும் சென்றடைந்து,இந்த ஆண்டு அதிகமான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்ந்து நடைபெற வேண்டும், தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற இடங்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.
இங்கு இருக்கக்கூடிய சகோதர சகோதரிகள் இந்த நாட்டை ஒரு புகலிடமாக உருவாக்கிக் கொண்டு இருக்கும் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டியது இன்னும் அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு வேலை வாய்ப்பு இன்றைக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்து கொண்டு இருக்கிறது. நமது முதலமைச்சர் அவர்களுக்காக வீடு கட்டிக்கொடுப்பது எனப் பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து உருவாக்கித் தந்து கொண்டிருக்கிறார். நாம் ஒன்றிய அரசாங்கத்திடம், அவர்களுக்குக் குடியுரிமை கிடைக்கத் தொடர்ந்து நியாயமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
நீட் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கும் திமுக அரசு
தமிழக அரசு தொடர்ந்து நீட் வேண்டாம் என்று முதலிலிருந்து கருத்துச் சொல்லிக்கொண்டு இருக்கின்றோம். இப்போதுதான் மற்ற மாநிலங்களில் உள்ள முதலமைச்சர், மக்கள் ஆகியோர் இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய பிரச்சினைகளை உணர்ந்துள்ளார். பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒரு நாள் ஒதுக்கி இருக்கலாம். ஆளுங்கட்சியினர் நீட் பற்றி விவாதிக்க முன் வரவில்லை, மணிப்பூர் பற்றிப் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்த சூழல் தான் பாராளுமன்றத்தில் இருக்கிறது. நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்குத் தொடர்ந்து திமுக முயற்சி மேற்கொள்ளும்.
த.வெ.க தலைவர் விஜய் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த கனிமொழி
இந்நிலையில், நீட் குறித்து நடிகர் விஜய் பேசிய கருத்துகள் பொது தளத்தில் பெரும் விவாதத்திற்கு வித்திட்டிருக்கும் நிலையில், நீட் தொடர்பான நடிகர் விஜய்யின் கருத்தை நானும் வரவேற்கிறேன் என கனிமொழி அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்றம் பற்றி பேசிய கனிமொழி
மேலும், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு, பிரதமர் அவர்களின் உரையாக இருந்தாலும் எழுந்து நின்றால் குறுக்கிடுதற்கு அனுமதிக்கப்படுவார். ஆனால் இப்பொழுதுதான் முதல்முறையாக அதற்கு அனுமதி இல்லை. எதிர்க்கட்சியினர் பேசும்போது யார் வேண்டும்னாலும் குறுக்கிடலாம் ஆனால் ஆளுங்கட்சி உறுப்பினர் பேசும் போது யாருக்குமே குறுக்கிட உரிமை இல்லை எனப் பேசினார்.
நீட் தொடர்பான நடிகர் விஜய்யின் கருத்தை வரவேற்கிறேன் – கனிமொழி கருணாநிதி #KanimozhiKarunanidhi #DMK #Vijay #TVKVijay #TVK #NEET pic.twitter.com/GBPCAYnrj6
— ABP Nadu (@abpnadu) July 5, 2024
உலக அகதி தினத்தை (ஜூன் 20 அன்று கொண்டாடப்படும்) நினைவுகூரும் வகையில் இரண்டாவது முறை இந்தத் திருவிழாவை நடத்துகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற உணவுத் திருவிழா பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், திருவிழாவில் ஒரே நாளில் 5,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்று வெற்றிகரமாக முடிந்தது.
உணவு திருவிழாவில், திமுக அயலக அணி தலைவரும்,வடசென்னை மக்களவை உறுப்பினருமான கலாநிதி வீராசாமி, மார்கரெட் விண்மா (மிஷன் துணைத் தலைவர், ஐ.நா. உயர் அகதிகள் ஆணையம்), வளன் மைக்கேல் (தொகுதி அலுவலகத் தலைவர், ஐ.நா. உயர் அகதிகள் ஆணையம்), எஸ்.சி.சந்திரஹாசன் (OfERR), சதிஷ் (உணவுப் பாதுகாப்பு இயக்குநர்), ரமேஷ் (துணை இயக்குநர், மறுவாழ்வு ஆணையம்) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.