EPS: ஈபிஎஸ்ஸை சிபிஐ விசாரிக்க கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 11ஆம் தேதி விசாரணை
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியை சிபிஐ விசாரிக்க கோரிய மனு வரும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று திமுகவின் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை வரும் ஜூலை 11ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
வழக்கு பின்னணி:
2018ஆம் ஆண்டு திமுகவின் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தமிழ்நாட்டில் 4800 கோடி ரூபாய் மதிப்பிலான 5 நெடுஞ்சாலை திட்ட பணிகள் தொடர்பான ஒப்பந்தங்களை எடப்பாடி முறைக்கேடாக அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அளித்ததாக கூறப்பட்டிருந்தது. மேலும் இந்த திட்ட பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் முறைகேடு நடைபெற்று இருந்ததாக அவர் புகாரில் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில் எடப்பாடி பழனிசாமியை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தேவைப்பட்டால் எடப்பாடி பழனிசாமி மீது சிபிஐ விசாரணை நடத்தலாம் மற்றும் வழக்குப்பதிவு செய்யலாம் என்று தெரிவித்திருந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த மேல் முறையீடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிசாமியை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடைவிதித்திருந்தது. அதன்பின்னர் இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கு வரும் 11ஆம் தேதி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
வரும் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு தடை தொடர்பான ஒபிஎஸ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. மேலும் 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதேநாளில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கும் விசாரணைக்கு வர உள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான பிரச்னை தொடர்ந்து வரும் நிலையில் ஈபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் மாறி மாறி நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். இதன்காரணமாக கடந்த சில நாட்களாக அதிமுக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்