’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று, வரலாற்று சாதனை படைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் திமுக இந்த முறை எம்.எல்.ஏ வேட்பாளர் தேர்வில் மிகுந்த கவனத்துடன் உள்ளது’

சமீபத்தில் ஆளும்கட்சியான திமுக நடத்திய சர்வேயில் தொகுதியில் நடப்பு சட்டமன்ற உறுப்பினரின் செயல்பாடுகள் தொடங்கி தொகுதியில் யார் யாருக்கு எப்படி செல்வாக்கு இருக்கிறது என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தலைநகரின் சென்னையில் பல வியப்பூட்டும் உண்மைகள் அவர்களுக்கு கிடைத்திருக்கின்றன.
சர்வே ரிப்போர்ட்டில் கிடைத்த வியப்பூட்டும் தகவல்கள்
சென்னையில் உள்ள 16 தொகுதி எம்.எல்.ஏ-வில் விருகம்பாக்கம், அம்பத்தூர், ராயபுரம், மயிலாப்பூர், வேளச்சேரி, டி.நகர் உள்ளிட்ட ஆறு தொகுதிகளில் திமுகவின் வெற்றி வாய்ப்பிற்கு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது என ரிப்போர்ட் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே வரிசையில் தான் தாம்பரம், திருவள்ளூர், அம்பத்தூர் தொகுதியும் இடம்பெற்றிருக்கிறது. இந்த முடிவுகள் உளவுத்துறை கொடுத்த முடிவுகளுடன் ஒத்துப்போனதைத் தொடர்ந்து தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டு சீட் கிடைப்பதே குதிரைக்கொம்பாக மாறியிருக்கிறது
விருகம்பாக்கத்தில் மீண்டும் பிரபாகர் ராஜாவுக்கு சீட் கிடைக்குமா ?
விருகம்பாக்கத்தைப் பொறுத்தவரை கடந்த முறை பிரபாகர் ராஜாவுக்கு அவரது அப்பாவின் அழுத்தத்தின் காரணமாகக் கடைசி நேரத்தில் சீட் ஓகே ஆனது. ஆனால், இந்த ஐந்து வருடத்தில் தொகுதியில் அவருக்குக் கொஞ்சமும் நல்லபெயரே இல்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவக்ரள். எல்லாவற்றையும் தாண்டி, இந்தமுறை அவருக்கு சீட் கேட்டு அவரது அப்பாவும் சிபாரிசு செய்யப்போவதில்லை. இதனால் இம்முறை அந்த தொகுதியில் ஏற்கனவே போட்டியிட கே.கே.நகர் தனசேகரனுக்கு வாய்ப்பு அதிகம் என்று கூறப்படும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த திரைப்பட நடிகரும், திமுக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவையின் துணைத் தலைவராக இருக்கும் போஸ் வெங்கட் துணை முதல்வர் வழியாக சீட் வாங்க கடுமையாக முயற்சி செய்கிறார்.
ஐடிரீம்ஸ் மூர்த்தி மீது கடும் அதிருப்தி
ராயபுரத்தை பொறுத்தவரை கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் சாதாரண ஒரு தொண்டனை நிறுத்தி உங்களைத் தோற்கடிப்பேன் என்று ஜெயகுமாருக்குச் சொன்ன வார்த்தைகளின் வழியே லக்கில் டிக்கான நபர்தான் ஐடிரீம்ஸ் மூர்த்தி.
கிடைத்த வாய்ப்பை சரியாக பயப்படுத்துக்கொள்ளவில்லை மூர்த்தி. தொகுதியில் அவரது செயல்பாட்டில் திமுக தலைமை நொந்துபோயிருக்கிறது. இந்தமுறை அவருக்குக் கண்டிப்பாக சீட் இல்லை என்ற நிலையில் இப்போது அப்பகுதியில் புதிய முகத்தை தேடிக்கொண்டிருக்கிறது திமுக. கடந்த முறை மாதிரி இந்த முறை தோல்வியை தழுவிடக் கூடாது என்று ராயபுரத்தின் முடிசூடா மன்னன் என தன்னை கூறிக்கொள்ளும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதியாக இருக்கிறார். இந்நிலையில், திமுகவை பொறுத்தவரை பெரும்பாலும் சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் பழ.செல்வகுமாருக்கு அல்லது சுபேர் கானுக்கு சீட் ஒதுக்கவே வாய்ப்புகள் அதிகம்.
மயிலாப்பூரை தக்க வைப்பாரா வேலு ?
மயிலாப்பூரைப் பொறுத்தவரை அங்கே பெரும்பான்மையாக இருந்த சமூக வாக்குகளில் SIR-ல் கிட்டத்தட்ட 38,000 வாக்குகள் வரை குறைந்திருப்பதில் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏகத்துக்கும் குஷியில் இருக்கிறார். பல்வேறு சர்ச்சையில் சிக்கியவர் மாவட்டச் செயலாளர் பதவி பறிபோகவேண்டிய சூழலில் மகளின் திருமணம் பதவியைக் காப்பாற்றியது. மாவட்டச் செயலாளராக இருந்தபோதிலும் அவரிடமிருக்கும் மயிலாப்பூர், டி.நகர் ஆகிய இரண்டு தொகுதியிலும் வேலுவின் செயல்பாடுகளால் தலைமை வெதும்பி போய்தான் இருக்கின்றது. இரண்டு தொகுதியிலும் புதிய முகங்களுக்கே வாய்ப்புகள் அதிகம்.
வேளச்சேரியில் போட்டியிடப்போவது மகேஸா அல்லது ஜோயலா ?
வேளச்சேரியைப் பொறுத்தவரை கடந்தமுறை கூட்டணிக்கு சென்ற நிலையில் இம்முறை கண்டிப்பாக திமுக வேட்பாளர் களமிறக்கப்படுவார்கள். அந்த தொகுதியில் இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் அல்லது துணை மேயர் மகேஷுக்கு வாய்ப்புகள் அதிகம்.
மாற்றத்திற்கு தயாராகும் தாம்பரம் ?
தலைநகரைப் போலவே சென்னையின் நுழைவாயிலாகத் தாம்பரம் தொகுதியிலும் மாற்றத்துக்குத் தயாராகிறது தலைமை. அந்த தொகுதியின் உறுப்பினர் செயல்பாட்டில் கொஞ்சமும் திருப்தி அடையவில்லை. 2006-ம் ஆண்டு முதல் இப்போதுவரை நான்கு தேர்தலில் போட்டியிட்டு மூன்று முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கிறார் எஸ்.ஆர்.ராஜா. உட்கட்சி பஞ்சாயத்து தொடங்கி தொகுதியில் திரும்பும் பக்கம் அனைத்திலும் சிக்கலை வளர்த்து வைத்திருக்கிறார் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். கண்டிப்பாக அவரை களமிறக்கினால் அது தேர்தல் வெற்றியைப் பாதிப்பும் என்று கருதத் தொடங்கியுள்ள திமுக தலைமை புதிய முகத்தைக் களமிறக்க முடிவு செய்திருக்கிறது.
இந்நிலையில் அந்த தொகுதியைக் குறிவைத்து முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் நெருக்கமாக இருக்கும் படைப்பை மனோகர் சீட் கேட்டுக் காய் நகர்த்தித் தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறார். ராஜா மீதுள்ள அதிருப்தி தேர்தல் வெற்றியை பாதிக்கும் என்பதை திமுக தலைமை உணர்ந்தால், வரும் தேர்தலில் தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளராக படைப்பை மனோகருன் நிறுத்தப்படதான் வாய்ப்புகள் அதிகம்
திருவள்ளூர் எம்.எல்.ஏ மீது கோபமான முதல்வர்
திருவள்ளூரைப் பொறுத்தவரைச் சமீபத்தில் நடந்து முடிந்த ஒன் டூ ஒன் சந்திப்பில் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் மீது ஒன்றிய செயலாளர்கள் பலரும் புகார் பட்டியலைப் புலம்பித் தள்ளியிருக்கிறார்கள். தனக்கு நன்றாகத் தெரிந்த ஒருவரை குறித்து இத்தனை நிர்வாகிகள் சொன்ன புகார்கள் முதல்வரையே அதிர்ச்சியடைய வைத்திருந்தது. உளவுத்துறை அறிக்கையில் அனைத்துமே உண்மை என்று தெரிய எம்.எல்.ஏ-வின் பி.ஏ-வும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட வர்தகரணி அமைப்பாளருமான நேதாஜி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். கூடவே அந்த தொகுதி உறுப்பினர் மற்றும் மாவட்டச் செயலாளரைக் கடுமையாக எச்சரித்து அனுப்பியிருந்தார் முதல்வர். அதிலும் ராஜேந்திரனிடம் இம்முறை சீட் கேட்டு வரவேண்டாம் என்றும் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். இதனால் அந்த தொகுதியில் புதிய முகத்துக்கே வாய்ப்புகள் அதிகம்.
குறிப்பாக முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவரும், துணை முதலமைச்சருக்கு நெருக்கமானவருமான அறியப்படும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை செயலாளருமான வி.சி.ஆர்.குமரன் ரேஸில் முன்னணியில் இருக்கிறார்.
அம்பத்தூரில் என்ன நிலை ?
அம்பத்தூரைப் பொறுத்தவரை எம்.எல்.ஏ செயல்பாடு மோசமாக இருந்தாலும் அவர் தொகுதி அமைச்சரான சேகர்பாபுவிடம் காட்டும் நெருக்கத்தால் அவர் தன்னை பாதுகாப்பார் என்ற நம்பிக்கையில் நாட்களை ஓடிக்கொண்டிருக்கிறார் ஜோசப் சாமுவேல். அந்த தொகுதி வேட்பாளர் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் அறிவாலய வட்டாரங்கள்.
இவர்கள் மட்டுமின்றி இன்னும் பலரது வேட்பாளர் தேர்விலும் இந்த முறை திமுக கவனமாக இருக்க முடிவு செய்துள்ளது. குறிப்பாக, இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து வரலாற்று சாதனை செய்ய திமுக திட்டமிட்டு செயல்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு தொகுதி வாரியாக தற்போதைய எம்.எல்.ஏக்களின் செயல்பாடுகள், அந்த தொகுதிகளில் மக்கள் மத்தியில் செல்வாக்காக இருக்கும் திமுகவை சேர்ந்த, சேராத பிரமுகர் என முழு விவரத்தையும் திமுக சேகரிக்கத் தொடங்கியிருக்கிறது. திமுக தரப்பு சேகரித்த விவரங்களை உளவுத்துறை, தனியார் அமைப்புகள் என மூன்று தனித் தனி அமைப்புகளிடம் கொடுத்து அதனை சரிபார்க்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதனால், தற்போதைய எம்.எல்.ஏக்கள் பலரும் பீதியில் உறைந்துள்ளனர்.






















