Ponmudi: டம்மியான பொன்முடி? சீனுக்கு வந்த எ.வ.வேலு! லட்சுமணன் பக்கா ஸ்கெட்ச்
இந்த முறை பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனதால் விழுப்புரம் மண்டல பொறுப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி ஓரம்கட்டப்பட்டு மண்டலப் பொறுப்பாளராக அமைச்சர் எவ வேலு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பொன்முடி இடத்தை பிடித்து விழுப்புரத்தை தனது கண்ட்ரோலில் எடுக்க நினைக்கும் லட்சுமணன், இப்போதே எ.வ.வேலுக்கு துண்டு போட தொடங்கிவிட்டதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
வீழத்தொடங்கிய பொன்முடி சாம்ராஜ்யம்?
விழுப்புரம் மாவட்டத்தையே தனது கண்ட்ரோலில் வைத்திருப்பவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான பொன்முடியின் சாம்ராஜ்யம் வீழத் தொடங்கியுள்ளது. முதலில் உயர் கல்வித்துறை, அடுத்தது மாவட்ட பொறுப்பு.. அடுத்து துணை பொதுச்செயலாளர் பதவி.. இறுதியாக அமைச்சர் பதவி என பொன்முடியின் சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்த நிலையில், விழுப்புரத்தின் ராஜாவாக இருந்த அவரது மதிப்பும் குறைய தொடங்கி அவர் டம்மி ஆகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கிய விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளரான லட்சுமணன் தனக்கென ஆதரவாளர்களை திரட்டி தலைமையின் குட்புக்கில் இடம்பெற சில வேலைகளை செய்து வருகிறார். தனக்கு பின் தனது மகன்தான் விழுப்புரத்தில் ராஜா என எண்ணி வரும் பொன்முடிக்கு ஆரம்பத்தில் இருந்தே லட்சுமணன் வளர்வது பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.
மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை
ஆனால் தவளை தன் வாயால் கெடும் என்பது போல பொன்முடியின் சர்ச்சை கருத்துகளும் நடவடிக்கைகளுமே அவரை இக்கட்டான நிலைக்கு தள்ளிவிட்டது. இந்நிலையில் 2026 சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து திமுகவில் வேலைகள் வேகமெடுத்துள்ளன. மாவட்ட வாரியாகக் கூட்டங்கள் நடத்தி குறைகளை கேட்பது, மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துவது என அடுத்தடுத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அந்த வகையில் தேர்தலுக்காக மண்டல அளவில் பொறுப்பாளர்களை நியமிப்பதற்கு ஸ்டாலின் லிஸ்ட் தயார் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கனிமொழி எம்பி, ராசா எம்.பி ஆகியோர் இந்த லிஸ்ட்டில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மண்டல அளவில் கட்சியை பலமாக வைத்திருப்பது முக்கியம் என்பதால் மூத்த அமைச்சர்கள், ஒவ்வொரு மண்டலத்திலும் செல்வாக்காக இருப்பவர்கள், கட்சியில் ஆக்டிவாக இருப்பவர்கள், கட்சி நிர்வாகிகளுடனும் இணக்கமாக இருப்பவர்கள் என பார்த்துப் பார்த்துக் கணக்கு போட்டு இந்த லிஸ்ட் ரெடியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த முறை பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனதால் விழுப்புரம் மண்டல பொறுப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு நியமிக்கப்பட்டுள்ளார்.
எ.வ.வேலுவைச் சந்தித்து சால்வை
இதனையடுத்து உடனடியாக லட்சுமணனின் கார் எ.வ.வேலு வீட்டிற்கு படையெடுத்துள்ளது. தனது ஆதரவாளர்கள் மற்றும் விழுப்புர நிர்வாகிகளை திரட்டிக்கொண்டு வேலுவை சந்தித்து சால்வை அணிவித்து வந்துள்ளார். மேலும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்னரே திமுகவின் நான்காண்டு ஆட்சி சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்துக்கான போஸ்டர்களில் அமைச்சர் எ.வ.வேலு படத்தை இடம் பெறச் செய்துள்ளார் லட்சுமணன்.
இந்த போஸ்டர்களில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் புகைப்படம் இடம்பெறவில்லை. ஏற்கனவே விழுப்புரத்தில் பொன்முடி vs லட்சுமணன் என்ற நிலை உருவாகி உள்ள நிலையில், தற்போது பொன்முடிக்கு ரீப்ளேஸ்மெண்டாக நியமிக்கப்பட்ட எ.வ.வேலுவை லட்சுமணன் கவனிக்க தொடங்கியுள்ளது விழுப்புரம் திமுகவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.






















