”ஆளுங்கட்சியே சட்டத்தை மீறுவது வேடிக்கையாக இருக்கிறது” - தொடரும் பேனர் கலாச்சாரம்!
அந்த கட்டவுட் கிட்டத்தட்ட 30 அடிக்கு மேல் உயரம் இருக்கும் என கூறப்படுகிறது .
தமிழகத்தில் கட்சினர் சார்பில் வைக்கப்படும் கட்டவுட் மற்றும் பேனர் கலாச்சாரங்களுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. பேனர்கள் மற்றும் கட்டவுட்டுகள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இருந்தாலும் அவ்வபோது கட்சியினர் தங்கள் தலைவர்களை இம்ப்ரஸ் செய்யும் நோக்கத்திலும் , கட்சி மீது கொண்ட தீவிர பற்று காரணமாகவும் தொடர்ந்து பேனர்கள் கட்டவுட்டுகள் வைத்து வருகின்றனர். பேனர்களை வைக்க வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னதாக தனது கட்சியினருக்கு அன்புக்கட்டளை விதித்திருந்தார். திமுக அமைப்பு செயலாளர் பாரதி கடந்த ஆண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கட்டவுட், பேனர்களை கட்சியினர் வைக்கக்கூடாது என அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். ஆனால் அதனை தொண்டர்கள் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை.
சமீபத்தில் சென்னை ராமாபுரத்தில் உள்ள அரசமரம் புவனேஸ்வரி கோவில் முன்பு கட்டவுட் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அது அந்த பகுதியில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக வந்த தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்களுக்காக எழுப்பட்டிருந்தது. அதே போல முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஒரு கட்டவுட் வைக்கப்பட்டிருந்தது. அந்த கட்டவுட் கிட்டத்தட்ட 30 அடிக்கு மேல் உயரம் இருக்கும் என கூறப்படுகிறது . அதோடு அவை மின்சார வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து பத்திரிக்கையாளர்கள் ராமாபுரம் காவல் அலுவலகத்தை தொடர்புக்கொண்டு கேட்ட பொழுது “ கட்டவுட் வைக்க காவல்துறை சார்பில் தடையில்லா சான்றிதழ்கள் எதுவும் பெறப்படவில்லை. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் வைக்கப்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்றம் தடை பிறப்பித்துள்ள நிலையில் எங்களால் அனுமதி வழங்க இயலாது “ என தெரிவித்துள்ளனர். சரி விதியை மீறி செயல்பட்ட சம்பந்தப்பட்ட கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்வீர்களா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு காவல்துறையினர் பதிலளிக்க மறுத்துள்ளனர்.மேலும் இது குறித்து பதிலளித்த அந்த பகுதி திமுக கவுன்சிலர் கே.ராஜூ, விழாவை நடத்த முறையாக நாங்கள் காவல்துறையின் அனுமதியை பெற்றோம். கட்-அவுட்டுகள் வைத்ததை நாங்கள் தவிர்த்திருக்க வேண்டும் மன்னிக்கவும் . அது மீண்டும் நடக்காது “ என தெரிவித்துள்ளார்.
அதேபோல திமுக செய்தித்தொடர்பாளர் , இந்த கட்-அவுட் விவகாரம் குறித்து பேசுகையில் திமுக தலைவர் இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஊக்குவிப்பதில்லை. ஆனால் கட்சி தொண்டர்கள் ஆர்வத்தில் இத்தகைய செயல்களை செய்துவிடுகின்றனர். இப்படியாக செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த பேனர் விவகாரத்தில் ஆளுங்கட்சியே சட்டத்தை மீறுவது வேடிக்கையாக இருக்கிறது என்றும் , விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் பின்னர் அதனால் என்ன பயன் என அரசு சாரா அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.