அதிமுகவுக்கு ஒப்பந்தம்.. முதலமைச்சரிடம் புலம்பி தீர்த்த நிர்வாகிகள்.. செயற்குழுவில் நடந்தது என்ன ?
Dmk Meeting: அதிமுகவினருக்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது என திமுக நிர்வாகிகள் முதலமைச்சரிடம் குமுறல்.
திமுக செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் திமுகவைச் சார்ந்த செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதலமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகள், பல்வேறு குற்றச்சாட்டுகளை செயற்குழு உறுப்பினர்கள் அள்ளி வீசி உள்ளனர். இது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
ஒப்பந்தங்கள் கிடைப்பதில்லை
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தி பேசுகையில், அதிமுக ஆட்சியில் யார் யார் ஒப்பந்தம் எடுத்தார்களோ? அவர்களே மீண்டும் ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வருகிறார்கள். அதிமுகவினர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படுகிறது. இதனால் உள்ளூரில் இருக்கும் திமுகவினருக்கு மரியாதை கிடைப்பதில்லை. அதிமுகவினர் பலரும் அமைச்சரிடம் பேசி காரியம் சாதித்துக் கொள்கிறார்கள். ஆனால் திமுகவினருக்கு எதுவும் கிடைக்கவில்லை என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தாராளமாக சீட் வழங்கக் கூடாது
குத்தாலம் கல்யாணம் பேசுகையில், நமக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதால், கூட்டணி தர்மம் எனக் கூறி அதிக இடங்களை ஒதுக்கி விடக்கூடாது. கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்கள் நம்மிடம் சீட்டு வாங்கிய பிறகு வேட்பாளர்களை தேடுகின்றனர். எனவே நாம் கூட்டணி கட்சியினருக்கு, சீட்டு வழங்குவதற்கு முன்பு அவர்களிடம் ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 5 வேட்பாளர்கள் பட்டியில் இருக்கிறதா என்பது குறித்து கேட்ட அரிய வேண்டும்.
அவ்வாறு வேட்பாளர் பட்டியல் கொடுத்தால், அதில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளரை நாமே தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் நாம் போட்டியிட நினைத்தோம். ஆனால் காங்கிரஸ் அந்த தொகுதியை கேட்டது, ஆனால் வேட்பாளரை வெளியூரிலிருந்து கொண்டு வந்து நிறுத்தியது இதனால்தான் தோல்வி கிடைத்தது. இதேபோன்று மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியிலும் வேட்பாளரை அறிவிக்காமல் காலம் கடத்தினார்கள். வேட்பாளர் இல்லாமல் கை சின்னத்திற்கு வாக்குகளைக் கேட்டோம். இறுதியில் வெளியூர் வேட்பாளரை கொண்டு வந்து, நிறுத்தினார்கள் அவரையும் வெற்றி பெற வைத்தோம் என தெரிவித்தார். மேலும் ஒரு சில நிர்வாகிகள் பேசுகையில், இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டுமென கோரிக்கையை முன் வைத்தனர்.
இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் பேசுகையில், அரசு விதிப்படி ஒப்பந்தங்கள் ஒதுக்கப்படுகிறது. 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்பது நமது ஒற்றை இலக்காக இருக்க வேண்டும். கூட்டணி விவகாரம் குறித்து தலைமை பார்த்துக் கொள்ளும். இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.