Ameer | ”விஜயகாந்த் ஜெயலலிதாவை அப்போது எதிர்த்தது தவறு !” - இயக்குநர் அமீர் வெளிப்படை பேச்சு!
"குடும்பம் அரசியல் தவறு என நான் கூறமாட்டேன். குடும்பம் அரசியலில் அரணாக இருக்கலாம் . ஆனால் கட்சி முடிவுகளை அவர்கள் எடுப்பார்கள் என்றால் அது தவறு."
இயக்குநரும் நடிகருமான அமீர் சமீபத்தில் பங்குபெற்ற நேர்காணல் ஒன்றில் விஜயகாந்த்தின் ஆரம்பகால அரசியல் நகர்வுகள் தனக்கு கொடுத்த நம்பிக்கை குறித்தும், அது எப்படி , எங்கு சரிய தொடங்கியது என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் ” விஜயகாந்த் அவர்கள் அரசியல் தளத்திற்கு வரும்பொழுது, திரைத்துறைய சேர்ந்த யாருமே அவருக்கு ஆதரவு கொடுக்கவில்லை. அதற்கு காரணம் அன்றைய காலக்கட்டத்தில் ஆளுமையாக இருந்த ஜெயலலிதா அவர்கள். அவர்கள் ஆளுமையில் இருந்த சமயத்தில் திரைத்துறையை சேர்ந்தவர்களோ, திரைத்துறை சங்கங்களோ அரசாங்கத்திற்கு உடன்பட்டே இருப்பார்கள். அப்படி இருக்கும் பொழுது விஜயகாந்த் கட்சி ஆரமித்தது யாருக்குமே பிடிக்கவில்லை. 2005- 2006 காலக்கட்டத்தில் திறைத்துறையினர் ஆதரவு அவருக்கு கிடையாது. ஆனால் நான் 2006 ஆம் ஆண்டே தேனியில் இருந்து ஒரு நேரலையில் கூறினேன் விஜயகாந்த் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வருவார் என்று, காரணம் அதற்கான சரியான தளத்தை அவர் போட்டிருந்தார். அந்த சமயம் திமுக ஆட்சியில் இருந்தது. அதன் பிறகு அதிகாரி ஒருவர் கேட்ட பொழுதும் விஜயகாந்த் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகுவார் என்றேன்.
அதே போல 2011 ஆம் ஆண்டு மிகப்பெரிய எதிர்கட்சி தலைவராக வந்தார். அதுவரையில் அவர் எடுத்து வைத்த படிகள் சரியாக இருந்தது. ஆனால் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே ஜெயலலிதாவை எதிர்க்க ஆரம்பித்துவிட்டார். அரசியல் என்பது சதுரங்க விளையாட்டை போன்றது. அந்த மூவ் சரியாக இருக்க வேண்டும். விஜய்காந்த் ஜெயலலிதாவை பாராளுமன்ற தேர்தல் வரையில் அமைதியாக இருந்து பின்னர் எதிர்த்திருக்க வேண்டும் . மக்கள் குறை சொல்வதற்கு முன்னால் , எதிர்கட்சிகள் குறை சொல்லக்கூடாது. அப்படி அவர் எதிர்த்து பேசியதால்தான் , ஜெயலலிதா நான் என் கட்சியினரால் உன்னோடு தவறான கூட்டணி வைத்துவிட்டேன் . நீ வேண்டுமென்றால் தணித்து நின்று பார்னு சவால் விட்டாங்க. அதன் பிறகு அவர் சரிவை சந்திக்க தொடங்கிவிட்டார். அதற்கு காரணம் ஒன்று குடும்ப அரசியல். அவரது மனைவி மற்றும் மனைவியின் தம்பிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்துவிட்டார். குடும்பம் அரசியல் தவறு என நான் கூறமாட்டேன். குடும்பம் அரசியலில் அரணாக இருக்கலாம் . ஆனால் கட்சி முடிவுகளை அவர்கள் எடுப்பார்கள் என்றால் அது தவறு. மாவட்ட செயலாளர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும் . இரண்டாவது விஜயகாந்த் உடல்நிலை. அவர் உடல்நிலை சரியாக இருந்திருந்தால் இன்று மிகப்பெரிய அரசியல் ஆளுமையாக வந்திருப்பார். மற்றொன்று அவர் உடல்நிலையை பொதுவெளியில் காரணமாக வைத்து வாக்குகள் திரட்ட அவரது கட்சியினர் நடந்துக்கொண்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை.” என்கிறார் இயக்குநர் அமீர்.