Udhayanithi: என்னையும் பயமுறுத்த முயற்சி பண்ணாங்க.. பயப்பட்ற ஆளா நான்? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
அமலாக்கத்துறை வைத்து தன்னைக்கூட பயமுறுத்த முயற்சி செய்தனர் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னையில் உள்ள வள்ளுவர்கோட்டத்தில் அறிவுத் திறன் திருவிழா நடந்தது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பேசியதாவது,
பயப்பட்ற ஆளா நான்?
சில நாட்களுக்கு முன்பு என்னைக் கூட அமலாக்கத்துறையை வைத்து பயமுறுத்த முயற்சி பண்ணாங்க. அதற்கெல்லாம் பயப்படும் ஆளா நான்? கலைஞரின் பேரன், கழகத் தலைவரின் வளர்ப்பு. எதிர்க்கட்சிகளை முடக்க தேர்தல் ஆணையமே இன்று அந்த வேலையில் இறங்கியுள்ளது.
SIR- என்று ஒன்று கொண்டு வந்திருக்கிறார்கள். தேர்தலையே இன்று திருட்டுத் தனமாக நடத்துற அளவுக்கு இன்று ஒன்றிய அரசு நடந்துகிட்டு இருக்குது. அத்தனை பேரும் விழிப்புணர்வோட இருக்க வேண்டிய காலகட்டம் இது. முதலில் உங்கள் ஒவ்வொருவரின் வாக்குகளையும் நீங்கள் பாதுகாக்க வேண்டும்.
கவனம் தேவை:
உங்களைச் சுற்றியிருக்கும் தகுதியான வாக்காளர் ஒருவர் கூட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிடக்கூடாது. இதில் நாம் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும். அதேபோல, போலி வாக்காளர்கள் சேர்ப்பதையும் நாம் அனுமதிக்கக்கூடாது.
நம் தலைவர் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளில் ஜெயித்துக் காட்ட வேண்டுமென்றால், நாம் இந்த பணியில் அடுத்த 2 மாதம் நாம் மிகவும் கவனமாக ஈடுபட வேண்டும். 1967ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கழகம் முதன்முதலில் ஆட்சியைப் பிடிப்பதற்கு அப்போது இருந்த உடன்பிறப்புகள் எப்படி சிறப்பாக வேலை பார்த்தார்களோ? அதைவிட அதிகமாக நாம் வேலை பார்க்க வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும்.
அடுத்த 4 மாதத்திற்கு வேறு எந்த பணியும் இருக்கக்கூடாது. 2026ம் ஆண்டு நாம் வெற்றி பெற்றால் அது கழகத்தின் வெற்றி மட்டும் கிடையாது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் வெற்றி என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். 7வது முறையாக கழகம் ஆட்சி அமைக்க, தொடர்ந்து 2வது முறையாக நமது தலைவர் முதலமைச்சராக இளைஞர்கள், தம்பிமார்கள் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும்.
அதற்கு இந்த அறிவுத் திருவிழா முற்போக்கு புத்தக காட்சி நிச்சயம் ஒரு அடித்தளமாக அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள், திரைப்பிரபலங்கள் யுகபாரதி, கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக தனது தேர்தல் பரப்புரையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.





















