Delhi CM: டெல்லியில் புது ரூட் எடுக்கும் பாஜக..! மோடி வந்ததும் அறிவிப்பு, மினி இந்தியா, யார் அந்த முதலமைச்சர்?
Delhi CM: டெல்லியில் இரண்டு துணை முதலமைச்சர்களை நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Delhi CM: பிரதமர் மோடி நாடு திரும்பியதும் டெல்லியின் முதலமைச்சர் தொடர்பான அறிவிப்பை வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளது.
டெல்லிக்கு இரண்டு துணை முதலமைச்சர்கள்:
தேசிய தலைநகர் டெல்லியை "மினி" இந்தியாவாகக் காட்டும் நடவடிக்கையில், புதிய அரசாங்கத்தில் இரண்டு துணை முதலமைச்சர்களை நியமிப்பது குறித்து பாஜக ஆராய்ந்து வருவதாகக் அக்கட்சித் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 27 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய தலைநகரில் ஆட்சியை கைப்பற்றிய பிறகும், தங்களின் முதலமைச்சர் யார் என்பதை இன்னும் பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய பிறகு கட்சி இறுதி முடிவை எடுக்க வாய்ப்புள்ளது. பாஜகவின் சட்டமன்றக் கட்சியின் முதல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம்:
பாஜக கூட்டத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 48 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதை மேற்பார்வையிட, நியமிக்கப்பட்ட பாஜக தேசியத் தலைமையைச் சேர்ந்த இரண்டு மூத்த உறுப்பினர்கள் தலைமை தாங்க உள்ளனர். டெல்லியில் இரண்டு துணை முதலமைச்சர்களை நியமிப்பதன் மூலம், பல்வேறு சாதிகள், சமூகங்கள் மற்றும் பிராந்திய பின்னணியைச் சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு பொறுப்பு அளிக்க வாய்ப்பு அளிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக டெல்லியில் கடந்த ஆம் ஆத்மி அரசாங்கத்தில், மணீஷ் சிசோடியா மட்டுமே துணை முதலமைச்சராக இருந்தார். அதேநேரம், பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இரண்டு துணை முதலமைச்சர்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியின் புதிய முதலமைச்சர் யார்?
இந்த கூட்டத்தில் டெல்லியின் புதிய முதலமைச்சராக, புது டெல்லி சட்டமன்ற தொகுதியில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் வர்மா முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்யுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், பாஜக மூத்த நிர்வாகி அஷீஷ் சூத், மூத்த தலைவர் விஜேந்தர் குப்தா, ஆர்எஸ்எஸ் அதரவு சதிஷ் உபத்யாய், கவனிக்கத்தக்க வெற்றி பெற்ற ஷிகா ராய், ரேகா குப்தா, மனோஜ் திவாரி மற்றும் ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோரின் பெயர்களும் முதலமைச்சர் பதவிக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் பிரதமர் மோடி:
கடந்த 10ம் தேதி ஃப்ரானஸ் சென்ற பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று 3 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா சென்றடைந்துள்ளார். 2 நாட்கள் அங்கு இருந்து அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அதனை முடித்துக்கொண்டு நாளை அவர் நாடு திரும்ப உள்ளார்.