Arvind Kejriwal: அடம் பிடிக்கும் கெஜ்ரிவால்; விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை; 6வது முறையாக சம்மன்
Arvind Kejriwal: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
![Arvind Kejriwal: அடம் பிடிக்கும் கெஜ்ரிவால்; விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை; 6வது முறையாக சம்மன் Delhi Liquor Policy Case: No-show After Five Summonses Delhi Chief Minister Arvind Kejriwal Gets ED Call Again Arvind Kejriwal: அடம் பிடிக்கும் கெஜ்ரிவால்; விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை; 6வது முறையாக சம்மன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/08/bcafec448ae9623077e6b271a1c03cbc1707381153719614_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆம் ஆத்மி கட்யின் தலைவரும் டெல்லி முதலமைச்சராகவும் உள்ளவர் அரவிந்த் கெஜ்ரிவால். மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்புவது இது ஆறாவது முறையாகும்.
கெஜ்ரிவால் தலைநகர் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகிய இருவர் சிறையில் உள்ளனர். ஆனால் ஏற்கனவே 5 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகவில்லை.
பிப்ரவரி 7 அன்று, கலால் கொள்கை தொடர்பான வழக்கில் சம்மனைத் தவிர்த்ததற்காக அமலாக்கத்துறை தாக்கல் செய்த புகாரின் பேரில் பிப்ரவரி 17 ஆம் தேதி கெஜ்ரிவாலை நேரில் ஆஜராகுமாறு டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், கட்சியின் செய்தித்தொடர்பு பிரிவு பொறுப்பாளர் விஜய் நாயர் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.
மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயரை தொடர்ந்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவார் என கடந்த சில நாள்களாகவே தகவல் வெளியான வண்ணம் உள்ளது. ஆனால், இதுவரை அதுபோன்று எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இப்படிப்பட்ட சூழலில், இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், ஏற்கனவே 5 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்நிலையில் 6வது முறையாக சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது.
5 முறை அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகவில்லை எனக் கூறி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையிட்டது. அமலாக்கத்துறையின் புகாரை விசாரித்த கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா, வரும் பிப்ரவரி 17ஆம் தேதி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டுள்ளார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 190 மற்றும் 200இன் கீழ் சம்மனுக்கு ஆஜராகவில்லை என்றும் பண மோசடி தடுப்பு சட்டம் பிரிவு 50இன் கீழ் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
தனக்கு சட்டவிரோதமாக சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கெஜ்ரிவால், "அது எதுவும் செல்லாது. இதுபோன்று, கடந்த காலத்தில் குறிப்பிட்ட காரணத்தை சொல்லாமல் பொதுவாக அனுப்பப்பட்ட நோட்டீஸை செல்லாது என அறிவித்து, அதை நீதிமன்றங்கள் ரத்து செய்துள்ளன. அரசியல் சதியின் ஒரு பகுதியாக இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது" என குற்றஞ்சாட்டினார்.
நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சி தலைவரான ஹேமந்த் சோரனை தொடர்ந்து தற்போது கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி தரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)