Arvind Kejriwal Timeline: அமலாக்கத்துறை உடனான அரவிந்த் கெஜ்ரிவாலின் சட்டப் போராட்டம்.. கடந்து வந்த பாதை!
டெல்லி மதுபான கொள்கை முறைகெடு வழக்கில் தன்னை கைது செய்த அமலாக்கத்துறைக்கு எதிராக கெஜ்ரிவால் மேற்கொண்ட சட்ட போராட்டம், வழக்கு கடந்து வந்த பாதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
பெரும் சட்ட போராட்டத்திற்கு பிறகு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று இடைக்கால பிணை கிடைத்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தன்னை கைது செய்த அமலாக்கத்துறைக்கு எதிராக கெஜ்ரிவால் மேற்கொண்ட சட்ட போராட்டம், வழக்கு கடந்து வந்த பாதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
2021ஆம் ஆண்டு, நவம்பர் மாதம்: டெல்லி அரசாங்கம், புதிய மதுபான கொள்கையை அறிமுகப்படுத்தியது.
2023ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம்: மதுபான கொள்கை மோசடி தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை முதல்முறையாக சம்மன் அனுப்பியது.
2023ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம்: கெஜ்ரிவாலுக்கு அனுப்பப்பட்ட இரண்டாவது சம்மனை ஏற்க மறுத்த அவர், இது 'சட்டவிரோதமானது என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது' என விமர்சித்தார்.
2023ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம்: ஜனவரி 3 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியது.
2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம்: அமலாக்கத்துறையால் அனுப்பப்பட்ட சம்மன், மத்திய அரசின் சதி என்று கூறி மூன்றாவது சம்மனை கெஜ்ரிவால் ஏற்க மறுத்தார்.
2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம்: ஜனவரி 18 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை நான்காவது முறையாக சம்மன் அனுப்பியது.
2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம்: அமலாக்கத்துறை சம்மன்களுக்கு பதிலளித்த கெஜ்ரிவால், "டெல்லி மதுபான கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக என்னை குறிப்பிடாத போதிலும் எனக்கு ஏன் சம்மன் அனுப்பப்படுகிறது" என்று கேள்வி எழுப்பினார்.
2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம்: ஐந்தாவது சம்மன் அமலாக்கத்துறையால் அனுப்பப்பட்டது.
2024ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம்: ஐந்தாவது முறையாக அமலாக்கத்துறை சம்மனை ஏற்க மறுக்கிறார் கெஜ்ரிவால்.
2024ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம்: சம்மனுக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறார் எனக் கூறி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்கிறது.
2024ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம்: நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றத்தால் விலக்கு அளிக்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம்: ஆறாவது சம்மனுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இது "சட்டவிரோத சம்மன்கள்" என்றும் இது தொடர்பாக சட்ட ஆலோசனை கேட்டுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. எழுப்பப்பட்ட சட்டப்பூர்வ கேள்விகளுக்கு தங்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்றும் ஆம் ஆத்மி கட்சி கூறியது.
2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம்: நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த செஷன்ஸ் நீதிபதி கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கினார்.
2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம்: அமலாக்கத்துறை சம்மன்களை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தன்னை கைது செய்யும் நோக்கில் செயல்படுவதால் அமலாக்கத்துறை முன் ஆஜராகப் போவதில்லை என்று கெஜ்ரிவால் தரப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதிட்டது.
2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம்: கைது செய்வதில் இருந்து பாதுகாப்பு அளிக்கக் கோரி கெஜ்ரிவால் தரப்பு நீதிமன்றத்தை நாடுகிறது. ஆனால், ஜெக்ரிவாலின் கோரிக்கையானது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம்: கைதில் இருந்து பாதுகாப்பு அளிக்க உயர் நீதிமன்றம் மறுத்த சில மணி நேரங்களில், அமலாக்கத்துறை கைதில் இருந்து பாதுகாப்பு அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்கிறார்.
2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம்: விசாரணைக்காக அமலாக்கத்துறை அனுப்பிய ஒன்பதாவது சம்மனையும் கெஜ்ரிவால் ஏற்க மறுக்கிறார். அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது.
2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் வழக்கறிஞர் குழு சென்று இருப்பதாக டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 21ஆம் தேதி: திகார் சிறையில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டார்.
2024ஆம் ஆண்டு, ஏப்ரல் 9ஆம் தேதி: விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததாலும் சம்மன்களுக்கு ஆஜராகாமல் இருப்பதாலும் அவரது கைது நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
2024ஆம் ஆண்டு, ஏப்ரல் 15ஆம் தேதி: கெஜ்ரிவால் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது.
மே 20ஆம் தேதி வரை, கெஜ்ரிவால் காவலை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
2024ஆம் ஆண்டு, மே 7ஆம் தேதி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழக்கை மே 7ஆம் தேதி அல்லது அடுத்த வாரத்தில் நீதிமன்றம் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
2024ஆம் ஆண்டு, மே 9ஆம் தேதி: உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு கூட அவரின் சொந்த பிரச்சாரத்திற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்படுவதில்லை என அமலாக்கத்துறை வாதிட்டது.
2024ஆம் ஆண்டு, மே 10ஆம் தேதி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது.