பாஜக வேட்பாளராக களமிறங்கிய மகன்.. வாழ்த்து சொல்லி கடைசியில் ட்விஸ்ட் வைத்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆண்டனி!
தனது மகனாக இருந்தாலும் பாஜக வேட்பாளர் அனில் ஆண்டனி தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. ஆண்டனி தெரிவித்துள்ளார்.
வரும் 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க உள்ளது. கடந்த முறை போன்று, இந்த முறையும் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. முதல் கட்டத்தில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
பாஜக வேட்பாளராக களமிறங்கிய ஆண்டனியின் மகன்:
வரும் ஜூன் 4ஆம் தேதி, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. நாடு முழுவதும் 370 தொகுதிகளை தனித்து கைப்பற்றுவோம் என பாஜக தலைவர்கள் சொல்லி வருகின்றனர்.
அதற்காக, இந்த முறை தென் மாநிலங்களில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற தீவிரமாக வேலை செய்து வருகிறது. குறிப்பாக, கேரளா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கேரள முன்னாள் முதலமைச்சருமான ஏ.கே. ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனியை பாஜக சமீபத்தில் தனது கட்சியில் இணைத்து கொண்டது.
கடந்தாண்டு கட்சியில் இணைந்த அனில் ஆண்டனிக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளித்தது. வரும் தேர்தலில், பத்தனம்திட்டா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், தனது மகன் பாஜகவில் இணைந்தது குறித்தும் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் ஏ.கே. ஆண்டனி மனம் திறந்து பேசியுள்ளார்.
"எனது மகன் தோற்க வேண்டும்"
தனது மகனாக இருந்தாலும் அனில் ஆண்டனி தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என ஏ.கே. ஆண்டனி தெரிவித்துள்ளார். தெற்கு கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆண்டோ ஆண்டனி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "இந்தியாவின் சிந்தனையையும் அதன் அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்கான தேர்தல் என்பதால், நான் வெளியே வந்து எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைத்தேன். ஊடகங்களிடம் பேச எனது உடல் நலப் பிரச்னைகளை ஒதுக்கி வைத்து இங்கு வந்துள்ளேன். செய் அல்லது செத்து மடி போர் போன்ற சூழல் உள்ளது" என்றார்.
திருவனந்தபுரத்தை தவிர்த்து வெளியே சென்று பிரச்சாரம் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு விளக்கம் அளித்த ஏ.கே. ஆண்டனி, "பத்தனம்திட்டாவுக்கு நான் பிரச்சாரத்துக்கு செல்லாவிட்டாலும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆண்டோ ஆண்டனி வெற்றி பெறுவார்.
என்னைப் பொறுத்தவரை குடும்பமும் அரசியலும் வேறு. இந்த நிலைப்பாடு புதிதல்ல. நான் கேரள மாணவர் சங்கத்தில் இருந்த நாட்களில் இருந்து அதைக் கடைப்பிடித்து வருகிறேன். காங்கிரஸ்தான் எனது மதம்" என்றார்.