Congress: காமராஜர் பேத்தி புகார் எதிரொலி; திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம் குமார் மாற்றப்பட்டது ஏன்?
காமராஜர் பேத்தி புகார் எதிரொலியாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம் குமாரின் பதவி மாற்றப்பட்டது.
திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக 9 வருடத்திற்கு மேல் பணியாற்றியவர் செங்கம் குமார். இவர் அந்த பதவியிலிருந்து நேற்று முன்தினம் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். திருவண்ணாமலை பேகோபுரத் தெரு மலையேறும் பாதைக்கு அருகில் சுமார் 38 ஆயிரம் சதுர அடி இடத்தை 1960-ல் அப்போதைய நகர காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், மேல்சபை உறுப்பினராகவும் இருந்த அண்ணாமலை பிள்ளை என்பவர் தானமாக பெற்றுள்ளார். மேலும் 1960-ல் அந்த இடம் நகர காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தம் என வில்லங்க சான்றிதழில்குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த இடம் எந்தவித பத்திர பதிவு ஆதாரம் இல்லாமல் ஐக்கிய ஜனதா தளத்தின் பெயருக்கு பட்டா மாற்றப்பட்டது. இதை நீக்க கோரி நகர காங்கிரஸ் தலைவர் வெற்றிச் செல்வன் மனு அளித்ததின் பெயரில் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி பட்டாவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
கடந்த ஜனவரி மாதம் இந்த இடத்தை கையகப்படுத்தும் போது ஜனதா தளத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் உடன்பாடு ஏற்பட்டது. பல வருடங்களாக மீட்கப்படாமல் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான ரூ.50 கோடிக்கு மேல் மதிப்பு உடைய இடத்தை செங்கம் குமார், வெற்றிச் செல்வன் முயற்சியால் மீட்டதை சாதனையாக காங்கிரசார் கருதி வந்தனர். இதை கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். இந்த இடத்தை மீட்பதற்கு ரூ.90 லட்சம் வரை செலவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த பணத்தை செலவு செய்தவர்கள் அந்த இடத்தை அனுபவித்துக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அனுமதி பெறாமல் ஆவணங்களில் திருத்தம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மாநில காங்கிரஸ் செயலாளரும், காமராஜரின் பேத்தியுமான கமலிகா புகார்
இது பற்றி மாநில காங்கிரஸ் செயலாளரும், காமராஜரின் பேத்தியுமான கமலிகா, அந்த சொத்தில் கடை கோடி தொண்டன் முதல் தலைவர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் உரிமை உள்ள நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இடம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த இடத்தை மீட்டு கட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமைக்கு கோரிக்கை விடுத்திருந்தார். பிறகு டெல்லியிலிருந்து வந்திருந்த காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கையை தலைமையிடம் தாக்கல் செய்தனர். இதையடுத்தே செங்கம் குமார், மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியிருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அதற்கான உத்தரவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பிறப்பித்துள்ளார். மேலும் செங்கம் குமார், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதனின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம் குமார் தெரிவிக்கையில்;
1960 இல் திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கமிட்டி பெயரில் பதிவு செய்யப்பட்ட சொத்து 1969-காங்கிரஸ் பிளவுக்கு பிறகு ஸ்தாபன காங்கிரசும், 1977-க்கு பிறகு ஜனதா கட்சியும், 1980-க்கு பிறகு ஜனதா தளம் கட்டுப்பாட்டிலும் இந்த சொத்து கைமாறிப் போனதை அனைவரும் அறிவார்கள். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் இல்லாத சொத்தை மீட்டெடுப்பதற்கு கடுமையான முயற்சியும், பொருட் செலவும் செய்து இன்றைக்கு திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கமிட்டி பெயரில் பதிவு செய்யப்பட்டு, பட்டாவும் பெறப்பட்டுள்ளது. இன்றைக்கு காங்கிரசின் சொத்தாக மாறியிருக்கிறது. இந்நிலையில், இந்த சொத்து பிரச்சினையின் காரணமாக காங்கிரஸ் மேலிடத்தில் சிலரால் கூறப்பட்ட புகார்களின் அடிப்படையில் தவறான புரிதலின் காரணமாக எனது பதவி நீக்கம் நிகழ்ந்துள்ளது. இதனால் நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன். உண்மையின் பக்கம் நான் நிற்கிறேன். காங்கிரஸ் தலைமை மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன். 40 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் பேரியக்கத்தில் முழு நேரமாக பணியாற்றியவன் என்ற முறையில் எனது பக்க நியாயத்தை ஆதாரங்களுடன் காங்கிரஸ் தலைமையிடம் சமர்ப்பித்து உண்மையை நிலைநாட்டுவேன். இவ்வாறு தெரிவித்தார்.