தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் ராஜினாமா - கே.எஸ். அழகிரி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
கே.எஸ்.அழகிரியை கண்டித்து பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர்.
கட்சிப் பொறுப்புகளுக்கு பணம் வாங்கப்படுவதாகவும், மாநிலத் தலைவர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு மாநிலத் தலைவர் ஒரு கண்டன அறிக்கை கூட கொடுக்காத நிலை இருப்பதால் தனது மாவட்டத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக இருப்பவர் காமராஜ். அவர் இன்று கோவில்பட்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கட்சியில் உட்கட்சித் தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை என்றும், பணம் வாங்கிக் கொண்டு பொறுப்புக்கள் போடப்பட்டுள்ளதாகவும், மாவட்ட தலைவர்களுக்கு தெரியாமல், கலந்து ஆலோசிக்கமால் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 15ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடந்த பிரச்சனை தொடர்பாக மாவட்ட தலைவர்களிடம் எவ்வித ஆலோசனை நடத்தாமல், கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது கண்டித்து ஒரு அறிக்கை கூட மாநில தலைவர் வெளியிடவில்லை என்றும், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தன்னுடைய கோரிக்கை மட்டும் பெரிது என்று நினைக்கிறார். கட்சி வளர்ச்சி தொடர்பாக கேட்க வரும் கட்சி தொண்டர்களை அடிக்கும் நிலை காங்கிரஸ் கட்சியில் உள்ளது. எனவே காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பதவியில் தான் தொடர விரும்பவில்லை என்றும், தனது ராஜினாமா தொடர்பாக மாநிலத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15-ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டனர். கே.எஸ்.அழகிரியை சூழ்ந்துகொண்ட காங்கிரஸ்காரர்கள், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரையும், அவரால் நியமிக்கப்பட்ட 3 வட்டார தலைவர்களையும் உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
கே.எஸ்.அழகிரி ஆலோசனை கூட்டம் முடித்துவிட்டு கிளம்பிய போது கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்களுக்கும், ரூபி மனோகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் மூன்று பேர் படுகாயமடைந்தனர். ரொம்ப நாளாக அமைதியா இருந்த சத்தியமூர்த்தி பவன் அடிதடியால் அதகளப்பட்டது.
தொடர்ந்து கடந்த 16-ம் தேதி மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள், ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தாங்கள் கையெழுதியிட்ட தீர்மானத்தை ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் வழங்கினர். இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, ரூபி மனோகரனுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், 24-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் நேரில் ஆஜராகி 15-ம் தேதி நடந்த சம்பவங்கள் குறித்து உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.