"மந்திரி சபையில் இடம்" திமுக கூட்டணியில் குழப்பமா? கண்டிஷன் போடும் காங்கிரஸ்
வருகிற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்டு வாங்குவதோடு மந்திரி சபையில் ஆட்சியில் பங்கு கோருவோம் என காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் ராஜேஷ் குமார் தெரிவித்த கருத்து திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகளை கேட்டு வாங்குவதோடு அமைச்சரவையில் ஆட்சியில் பங்கு கோருவோம் என்றும் திமுக தவறு செய்தால் காங்கிரஸ் தட்டிக் கேட்கும் என்றும் காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார். முருகன் அனைவருக்கும் பொதுவான கடவுள் என்றும் ஆன்மீகம் செய்ய வேண்டிய இடத்தில் அரசியல் செய்ய பார்க்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.
"மந்திரி சபையில் இடம்"
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் ராஜேஷ் குமார் தலைமையில் ஏழைகளுக்கு தையல் இயந்திரம் வழங்கி கேக் கொட்டி கொண்டாடப்பட்டது.
இதை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ராஜேஷ்குமார், "காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி. தமிழக நிலைமையை தலைமையிடம் கூறி உள்ளோம்.
திமுக கூட்டணியில் குழுப்பமா?
நிச்சயமாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு முன்பாகவே இந்த கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று நாங்கள் நிச்சயமாக கேட்போம். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கொடுத்த வாக்குறுதியை எங்களது தொகுதி உட்பட எல்லா பகுதியிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனாலும், அரசு ஆளும் கட்சியாக இருந்தாலும் தவறு செய்தால் தட்டி கேட்போம். தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி கிராம காங்கிரஸ் அமைப்பு என்ற பெயரில் 16000 கமிட்டிகளை அமைத்து வலுமையாக உள்ளோம். அதன் அடிப்படையில் அதிக தொகுதி கேட்பதில் தவறு கிடையாது.
காங்கிரஸ் போடும் கண்டிஷன்:
எங்கள் அகில இந்திய கமிட்டியிடம் கூறி இருக்கிறோம். அவர்கள் கேட்டு வாங்குவார்கள். தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கடந்த முறை 25 சீட்டுகளை பெற்றோம். இந்த முறை அதிக இடங்களை வாங்குவதுடன் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கோருவோம். தமிழகத்தில் முழுமையாக மதுகடை மூடபட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் கொள்கை" என்றார்.
மதுரை முருகன் பக்தர்கள் மாநாடு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், "முருகன் அனைவருக்கும் பொதுவான கடவுள். ஆன்மீகம் செய்ய வேண்டிய இடத்தில் அரசியல் செய்ய பாஜகவினர் பார்க்கிறார்கள். அவர்கள் வேறுவழியில் செல்கிறார்கள்" என்றார்.






















