ராமதாசுக்கு வேலையில்ல.! முதல்வர் ஸ்டாலினை கடுமையாக தாக்கிய அன்புமணி, தமிழிசை, அண்ணாமலை,.!
CM Stalin PMK Ramadoss: முதலமைச்சர் ஸ்டாலின், இப்படி பேசுவார் என எதிர்பார்க்கவில்லை, எங்களது தலைவரை அசிங்கப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் கேள்விக்கு, பதிலளிக்க முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தமைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
சர்ச்சையான முதலமைச்சர் பேச்சு:
சென்னை எழில் நகரில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் அதானி தமிழ்நாட்டோடு ஒப்பந்தம் என்று வெளியான தகவல் குறித்து ராமதாஸ் கேள்வி எழுப்பியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், அதானி விவகாரத்தில் துறையின் அமைச்சரே விளக்கம் அளித்துள்ளார்.
“பாமக நிறுவனர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. தினமும் அரசுக்கு எதிராக அறிக்கை விட்டுட்டு இருப்பார். அதுக்குலாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டியளித்திருந்தார்.
இந்நிலையில் , முதலமைச்சர் ஸ்டாலின் ,பாமக நிறுவனரான ராமதாசுக்கு பதில் சொல்ல அவசியம் இல்லை என தெரிவித்தமைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாமக தலைவர் அன்புமணி, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தலைவர் அண்ணாமலை என்ன தெரிவித்துள்ளனர் என்பது குறித்து பார்ப்போம்,.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்:
முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சுக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, தொழிலதிபர் அதானியை உங்களது இல்லத்தில், எதற்கு தனியாக சந்தித்தீர்கள் என கேள்வி கேட்டார், இதில் என்ன தவறு இருக்கிறது. எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பது உரிமை, பதவியில் இருப்பவர்கள் பதில் சொல்வது கடமை.
அதைவிடுத்து, எங்களது தலைவரை அசிங்கப்படுத்தியிருக்கிறார் முதலமைச்சர். இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது, மருத்துவர் ஐயா , இல்லையென்றால் , உங்களது தந்தை 2006 ல் முதலமைச்சராக இருந்திருக்க முடியாது, உங்களையும் துணை முதலமைச்சராக்கினார். எங்கள் ஐயா இல்லையென்றால், கலைஞருக்கு மெரினா கடற்கரையில் அடக்கம் செய்திருக்க முடியாது. 6 இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தவர். சமூக சீர்திருத்தவாதியை எப்படி, இப்படி சொல்லலாம்.
ஏன் அறிக்கை விடுகிறோம், தமிழ்நாடு மக்கள் நலம்பெற வேண்டும் என கேள்வி கேட்கிறோம். முதலமைச்சர் இப்படி பேசுவார் என நினைக்கவில்லை. முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும், எனவும் முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து பேசினார் அன்புமணி ராமதாஸ்
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்:
மக்கள் நலனில் அக்கறை கொண்டு எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும் அதை மதிக்க வேண்டும் என்பது ஜனநாயகம். மக்களுக்காக கருத்து சொன்னால், அவர்கள் வேலை இல்லாமல் தான் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது சொன்ன கருத்துக்கள் எல்லாம் மக்களுக்காக இல்லாமல், வேலையில்லாமல் இருந்து கொண்டு சொன்ன கருத்துக்கள்தானா, ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்... அதுவும் பாமக தலைவர் ராமதாஸ், பெரியவர் போன்ற அனுபவமிக்க தலைவர்களின் கருத்தை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பழி சொல்வதாக எடுத்துக் கூடாது என்பதை அரசியல் அனுபவம் மிக்க உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை..
மக்களுக்காக இதை சொல்கிறேனே தவிர எனக்கும் வேலை வேலையில்லாமல் இதை சொல்லவில்லை. தமிழகத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்று தான் மற்ற மாநிலங்களில் எனக்கு இருந்த வேலையை விட்டுவிட்டு இங்கே வந்திருக்கிறேன்... 2026 யாருக்கு வேலை இருக்கப் போகிறது யாருக்கு வேலை இல்லாமல் போகப் போகிறது என்பதை உணர்த்தும். யாருக்கும் நிரந்தரமாக வேலை இருக்கப் போவதில்லை யாரும் நிரந்தரமாக வேலை இல்லாமல் இருக்கப் போவதில்லை என தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை:
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான ராமதாஸ், அவர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தரக்குறைவான முறையில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சியில் இல்லாத கடந்த 2011 – 2021 பத்து ஆண்டுகள், அங்கும், இங்கும், ஆளுநர் மாளிகைக்கும் எனத் தான் ஓடி ஓடிச் சென்றதை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மறந்து விட்டார் போலும். ஐயா ராமதாஸ் அவர்கள் மீதான அவரது இன்றைய விமர்சனத்தை, அன்று அவர் மீது வைத்திருந்தால், அதனை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார்? அரசியலில் திமுகவின் இரட்டை வேடத்தைக் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு.
குறிப்பாக, தமிழக அரசியல் வரலாற்றில், முக்கியமான பங்கினை வகிக்கும் ராமதாஸ் அவர்கள் கேட்டிருக்கும் கேள்வியின் உண்மையை எதிர்கொள்ள இயலாமல், இது போன்ற தரக்குறைவான, முற்றிலும் ஏற்கத் தகாத முறையில் பதிலளித்திருப்பது, முதலமைச்சரின் இயலாமையைத்தான் காட்டுகிறது. அவர் வகிக்கும் தமிழக முதலமைச்சர் பதவிக்கு அது அழகல்ல என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன் என பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.