Tamilnadu Lockdown: ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? முதல்வர் இன்று ஆலோசனை
தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 30ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 24ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு எந்த தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமலானது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்கவும், பால் விநியோகத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 30ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று காலை 11 மணிக்கு அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். முன்னதாக, தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று முதல்வர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முழு ஊரடங்கு காலத்தில் சில செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி
* மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள்
* பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம்
* பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்
* உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. Swiggy, Zomato போன்ற மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்
* பெட்ரோல், டீசல் பங்க்குகள் வழக்கம் போல் இயங்கும்
* ஏ.டி.எம். மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.
* வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்
* தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள்போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
* மின்னணு சேவை (E-commerce) காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை இயங்கலாம்.
தமிழகத்தின் பெரிய மாநகராட்சியான மதுரையில் ஏற்கனவே வீடுகளுக்கு நேரடியாக காய்கறிகள் வினியோகம் செய்யும் முறையை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. கடந்த அலையில் மேற்கொண்ட அதே நடவடிக்கையை தற்போதும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,764 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 29,717 பேர் நோய்த் தொற்றில் இருந்து புதிதாக குணமடைந்துள்ளனர். இதன்மூலம், மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,10,224 ஆக குறைந்துள்ளது. விலகி இருப்பதும், வீட்டில் இருப்பது மட்டுமே பெரும்பாலும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துள்ளது என்பதால் இம்முறையும் அந்த ஆயுதத்தையே அரசு கையில் எடுக்கும் என தெரிகிறது.