RIP Vijayakanth : "எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே" கேப்டன் விஜயகாந்திற்கு முதலமைச்சர் புகழஞ்சலி!
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வந்து, தே.மு.தி.க. அரசியல் கட்சியைத் தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து வரை உயர்ந்த விஜயகாந்த் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
விஜயகாந்த் உடல் அடக்கம்:
இந்த நிலையில், அவரது உடல் சற்று முன் கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் உயிரிழந்த செய்தியறிந்ததுமே அவரது வீட்டிற்கு நேரில் சென்று நேற்று காலை அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று இறுதிச்சடங்கிலும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே...#CaptainVijayakanth pic.twitter.com/DaBkTcuR6n
— M.K.Stalin (@mkstalin) December 29, 2023
அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் தனது ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்துள்ளார். இறுதிச்சடங்கில் பங்கேற்ற புகைப்படங்களை பதிவிட்டு, எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே என்று பதிவிட்டுள்ளார்.
குவிந்த தொண்டர்கள்:
அவர் காலமான செய்தியறிந்ததும் திரையுலகினரும், பொதுமக்களும் அவரது வீட்டில் குவியத் தொடங்கினர். லட்சக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த வருவார்கள் என்பதால் அவரது உடல் தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில், இன்று மதியம் 2 மணியளவில் அவரது உடல் தீவுத்திடலில் இருந்து மக்கள் வெள்ளத்தில் எடுத்து வரப்பட்டது.
அவரது உடலுடன் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னும், பின்னும் அஞ்சலி செலுத்தியபடி வர அவரது உடல் கோயம்பேட்டிற்கு வந்தது. 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமின்றி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், விஜயகாந்த் குடும்பத்தினர், உறவினர்கள், தே.மு.தி.க. மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
கோயம்பேட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் கோயம்பேட்டில் அஞ்சலி செலுத்த குவிந்திருந்தனர். உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொடர்ந்து மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.