சேப்பாக்கம் ஏன் உதயநிதியின் அரசியல் மைல் கல்: மனம் திறக்கும் உதயநிதி ஸ்டாலின்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தனது அரசியல் வாழ்கையில் மைல் கல்லாக இருக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், அதன் பின்னணியில் பெரிய திட்டம் இருப்பதாகவே தெரிகிறது.
திமுக இளைஞரணி செயலாளரும் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின், ABP நாடு டிஜிட்டல் தளத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதில் பல்வேறு கருத்துக்களை அவர் தெரிவித்திருந்த நிலையில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவது குறித்து அவர் தெரிவிக்க கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவது தனது அரசியலில் பெரிய மைல்கல்லாக அமையும் என உதயநிதி கூறியிருப்பது, அவரது அடுத்த கட்ட நகர்வின் குறியீடாகவே பார்க்கப்படுகிறது. எப்படியும் திமுக ஆட்சி அமைக்கும் என உதயநிதி நம்புகிறார். அவர் நம்பிக்கையின் படி திமுக ஆட்சி அமைத்தால், தனது அரசியல் பயணம் வேறொரு கட்டத்திற்கு நகரும் என உதயநிதி நம்புகிறார். அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை தான் ஏற்கப் போவதில்லை என கூறினாலும், அரசியலுக்கே அவர் வரமாட்டார் என்று முன்பு கூறப்பட்ட கருத்துக்களை இத்துடன் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.
சினிமாத்துறையில் தன்னை நிரூபித்தது போல, கட்சிப்பணியில் தன்னை நிரூபித்தது போல அரசியலில் அதாவது மக்கள் பிரதிநிதியாக தன்னை நிரூபிக்க சேப்பாக்கம் தனக்கு களம் அமைக்கும் என உதயநிதி நம்புகிறார். அவரது நம்பிக்கையை சேப்பாக்கம் நிறைவேற்றுகிறதா, அதற்கு தமிழகம் வழிவிடுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.