தமிழகம் முழுவதும் ரூ.428 கோடி பறிமுதல் - தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.428 கோடியே 46 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளை சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, அதிகாரிகள் வாக்கு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளில் பொருத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
6.28 கோடி வாக்காளர்கள்
இந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதாப் சாஹூ இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் பணிக்காக மொத்தம் 4 லட்சத்து 17 ஆயிரத்து 521 நபர்கள் ஈடுபட உள்ளனர். இந்த தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 6.28 கோடி நபர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
ரூ.428 கோடி பறிமுதல்
தமிழகம் முழுவதும் இதுவரை நடைபெற்ற கண்காணிப்பு பணிகள் மூலம் ரூ.428 கோடியே 46 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலே கரூர் தொகுதியில் அதிகளவில் தேர்தல் நடத்தை விதிகள் மீறியதாக புகார் எழுந்துள்ளது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வாக்களிக்க ஏதுவாக பி.பி.இ. கிட் வழங்கப்படும். இந்த தேர்தலில் பூத் சிலிப் இல்லாவிட்டலும் வாக்களிக்கு முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே, உரிய ஆவணங்களுடன் சென்று வாக்குச்சாவடியில் வாக்களிக்கலாம்".
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் ரத்தா?
மேலும். அவரிடம் அ.தி.மு.க. தரப்பில் தேர்தலை ரத்து செய்ய அளிக்கப்பட்ட புகார் மனு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சாஹூ, தேர்தலை ரத்து செய்வது குறித்து தேர்தல் ஆணையம் மட்டுமே முடிவு எடுக்க முடியும் என்றார்.