(Source: ECI/ABP News/ABP Majha)
TN BJP Annamalai: முறிந்த கூட்டணி; இன்று டெல்லி பறக்கிறார் அண்ணாமலை! என்ன சொல்லப்போகிறது தேசிய தலைமை?
TN BJP Annamalai: குறிப்பாக ஒரு மக்களவைத் தேர்தல் அதைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் பிரிக்க முடியாத கூட்டணியாக இருந்த அதிமுக - பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டது புகைச்சலை உண்டாக்கியது.
TN BJP Annamalai: மக்களவை பொதுத்தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களத்தில் இப்போது இருந்தே காட்சிகள் மாறத்துவங்கியுள்ளன. குறிப்பாக ஒரு மக்களவைத் தேர்தல் அதைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் பிரிக்க முடியாத கூட்டணியாக இருந்த அதிமுக - பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டது புகைச்சலை உண்டாக்கியது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மறைந்த அதிமுக முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை குறித்தும் சர்ச்சையாக பேசியது அதிமுக தலைமையை வருத்தத்திற்கு உள்ளாக்கவே இந்த முறிவு ஏற்பட்டுள்ளதாக அதிமுக தலைமையே நேரடியாக கூறியது.
இந்நிலையில் இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையிடம் கேட்டபோது, தேசிய தலைமைதான் முடிவு எடுக்கும் என பதில் அளித்திருந்தார். இந்நிலையில் என் மண் என் மக்கள் யாத்திரைக்கு இடையில் பாஜக தலைமையிடம் இருந்து அழைப்பு வந்ததாக கூறப்படும் நிலையில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று அதாவது அக்டோபர் 1ஆம் தேதி டெல்லி செல்கிறார்.
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு அடுத்து அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொள்வதால் இந்த பயணம் மிகவும் முக்கியமான பயணமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் இன்று மாலை மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகின்றது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து பாஜக மாநில்த தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் என இருவரும் இன்று டெல்லி செல்கின்றனர். இதில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், ‘5 மாநில தேர்தல் நடைபெறுதால் வேட்பாளர் தேர்வு உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக செல்கின்றோம். நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூட்டணி முறிவு குறித்து அறிக்கை தாக்கல் செய்ததாக ஊடகங்களில்தான் செய்தி வருகின்றது. அந்த மாதிரி எதுவும் நடந்து இருக்கா என எனக்கு தெரியாது. அது என் வேலையும் அல்ல. மகளிர் அணி தலைவராக, எம்.எல்.ஏ.,வாக எனது பணிகளை செய்து கொண்டு இருக்கின்றேன்’ எனக் கூறினார். இதுமட்டும் இல்லாமல் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை டெல்லி செல்வது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை டெல்லலி வருவது எனக்கு தெரியாது எனவும் அதிமுகவுடனான கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் சிரித்த படி சென்றுவிட்டார்.