செந்தில் பாலாஜி வழக்கின் ஆதாரமே ஸ்டாலின் தான் - முன்னாள் எம்பி ராமலிங்கம்
செந்தில் பாலாஜி குறித்து ஸ்டாலின் பேசிய குறிப்புகள் சட்டமன்றத்திலும் இன்றும் உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கின் ஆதாரமே ஸ்டாலின் தான் என கரூரில் முன்னாள் எம்பி ராமலிங்கம் கூறியுள்ளார்.
கரூரில் தனியார் விடுதியில் பாஜகவின் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ், திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சா நெஞ்சன், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார், கரூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் அஜித் குமார், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட துணை தலைவர் ராஜ்குமார் கலந்துகொண்டனர். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சேலம் பெரும் பெருங்கோட்ட பாஜக பொறுப்பாளருமான ராமலிங்கம், ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில், பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் கரூரில் முதன்முதலாக துவக்கி உள்ளோம். இனி படிப்படியாக அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் கூட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தார். அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்றதாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்த நடவடிக்கை குறித்து செய்தியாளர் கேட்டபோது, அது சரியான நடவடிக்கை தான் என்றும், தவறு யார் செய்தாலும், அவர் மீது நடவடிக்கை எடுப்பது தவறு இல்லை என தெரிவித்த அவர், அமலாக்கத்துறை மத்திய அரசிற்கு கட்டுப்பட்ட அமைப்பு. அந்த துறை சார்ந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரம் இருக்கும்போது, தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரை அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைப்பதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவேண்டும் என கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் செயல்படும் இந்த அரசு முட்டாள் அரசு, அறிவு கெட்ட அரசு என ஆக்ரோஷமாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், செந்தில் பாலாஜி வழக்கில், ஆதாரமே ஸ்டாலின் தான் எனவும், கரூர் மாவட்டம் குளித்தலையில் நடைபெற்ற கூட்டத்தில் செந்தில் பாலாஜி செய்த ஊழல் குறித்து பேசியது ஸ்டாலின் தான். செந்தில் பாலாஜி குறித்து ஸ்டாலின் பேசிய குறிப்புகள் சட்டமன்றத்திலும் இன்றும் உள்ளது என தெரிவித்த அவர், செந்தில் பாலாஜி வழக்கின் முகாந்திரமே அதுதான் எனவும், செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்து நீதிபதியை குறை கூறுவதில் என்ன நியாயம் இருக்க முடியும் என கேள்வி எழுப்பினர். அன்று பேசியது அனைத்தும் தவறானது என ஒப்புக்கொண்டு செந்தில் பாலாஜி உத்தமர் தான் என ஸ்டாலினால் சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினார்.