Khushbu: தாய்மார்களுக்கு ரூ.1,000 பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்கு கிடைக்குமா? - குஷ்பூ சர்ச்சை பேச்சு
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் பாஜக நிர்வாகியான குஷ்பூ தலைமை வகித்தார்.
மாதந்தோறும் ரூ.1000 பிச்சை போட்டால் தாய்மார்கள் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா? என பாஜக நிர்வாகி குஷ்பூ தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சமீபத்தில் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். திமுகவில் அயலக அமைப்பு பிரிவில் நிர்வாகியாக இருந்த இவர் இந்த விவகாரத்தில் சிக்கியவுடன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் ஜாபர் சாதிக் பற்றி வெளியாகியுள்ள தகவல்கள் மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜாபர் சாதிக் விவகாரத்தில் திமுகவுக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதனிடையே திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் பாஜக நிர்வாகியான குஷ்பூ தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எவ்வளவு போதைப் பொருட்கள் தமிழகத்துக்கு வந்திருக்கிறது. ஒவ்வொரு இடத்துக்கும் இங்க இருந்து போதைப் பொருட்கள் போகுது. இதை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் டெல்லியில் இருக்கும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.
போதைப்பொருள் தொடர்பாக திமுகவுக்கு எதிரான நிலைப்பாடு இருப்பதால் தான் நாங்கள் குற்றச்சாட்டு வைக்கிறதா யாரும் சொல்ல முடியாது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார். இன்னைக்கு தாய்மார்களுக்கு ரூ.1000 கொடுத்தாலோ, பிச்சை போட்டால் அவர்கள் வாக்கு அளித்து விடுவார்களா?” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
தொடர்ந்து பேசிய குஷ்பூ, “தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் போய்க்கொண்டிருக்கிறது. இதுவே அதிமுக ஆட்சியில் பிரச்சினை நடத்திருந்தால் முதலமைச்சர் பதவி வேண்டும் என திமுகவின் சொல்வார்களே, இப்ப நான் சொல்றேன் போதைப்பொருள் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். உங்க கட்சியில் இருந்த ஜாபர் சாதிக் தான் போதைப்பொருளை கட்சிக்காரர்களுக்கும் சப்ளை செய்திருக்கிறார். கட்சி நடத்த பணம் கொடுத்திருக்கிறார். 3500 கிலோ கிராம் சப்ளை பண்ணியிருக்காரு. இதன்மூலம் ரூ.1, 40,000 கோடி பணம் வந்திருக்கு. 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களிடம் கூட போதைப்பொருள் உள்ளது. இதெல்லாம் எங்கிருந்து வருது?.
தாய்மார்களின் நீண்ட நாள் கோரிக்கையான டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பான நடவடிக்கை எடுங்க பார்ப்போம். பள்ளி, கல்லூரிகள் போகும் பிள்ளைகளின் தாய்மார்கள் எங்கே போதைப்பொருட்களுக்கு தன் பிள்ளைகள் அடிமையாகி விடுவாரோ என பயப்படுகிறார்கள்” என தெரிவித்தார். தமிழ்நாடு அரசால் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.இது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், அதனை பிச்சை என சர்ச்சைக்குரிய வகையில் குஷ்பூ பேசியிருப்பது பலரது கண்டனங்களையும் பெற்று வருகிறது.