பாஜகவை பொறுத்தவரை அகில இந்திய தலைமையின் முடிவுதான் இறுதி முடிவு - நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் யாரும் தனியாக போட்டியிட்டதில்லை. யாராவது ஒரு கட்சியுடன் கூட்டணி குறிப்பாக காங்கிரஸ் - திமுக, பாரதிய ஜனதா கட்சி- திமுக, பாரதிய ஜனதா கட்சி - அதிமுக இப்படி தான் கூட்டணி அமைத்துதான் போட்டியிடுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாஜக, அதிமுகவுடன் இணைந்து பயணித்து வருகின்றனர்.. குறிப்பாக கடந்த 2022 சட்டமன்ற தேர்தல் மற்றும் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு நான்கு தொகுதியில் வெற்றி பெற்றது. அதேசமயம் கடந்த சில நாட்களாகவே பாஜக அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் வகையில் பல்வேறு சம்பவம் நடைபெற்றது.
குறிப்பாக தற்போது இரு கட்சி நிர்வாகிகளும் ஒருவருக்கொருவர் மாறி மாறி எதிர் எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம், கூட்டணி வைத்தால் பதவி விலகுவதாக அண்ணாமலை கூறிய கருத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது..
இதுகுறித்து அதிமுகவினர் கருத்து தெரிவிக்கும்போது அண்ணாமலை கூறியது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பதவி விலகுவதாக அண்ணாமலை கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என நெல்லையில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக சட்டமன்ற குழு தலைவரும், எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறும்பொழுது, ”எந்த பிரச்சினையாக இருந்தாலும் பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரை அகில இந்திய தலைமை எந்த முடிவு எடுக்கிறதோ அதன்படி தான் நடக்கும். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பதவி விலகுவதாக அண்ணாமலை தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்.
இதுவரை தமிழகத்தில் யாரும் தனியாக போட்டியிட்டதில்லை. யாராவது ஒரு கட்சியுடன் கூட்டணி குறிப்பாக காங்கிரஸ் - திமுக, பாரதிய ஜனதா கட்சி- திமுக, பாரதிய ஜனதா கட்சி - அதிமுக இப்படி தான் கூட்டணி அமைத்து தான் போட்டியிடுகிறது. தனியாக யாராவது போட்டியிருகிறார்களா? அல்லது தனியாக போட்டியிடுவதாக அறிவிக்க முடியுமா? இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் கூட்டணி இன்றி போட்டியிட்டதில்லை. அண்ணாமலையின் கருத்தை வரவேற்று பேசுகிறார்கள் என்றால் கருத்து சொல்வதற்கு அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. கேள்வி கேட்க உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறது பதில் சொல்வதற்கு எனக்கு சுதந்திரம் இருக்கிறது. அதே போல தான் அதிமுகவில் உள்ள ஆதிராஜாராம் அவரது கருத்தை வரவேற்று சொல்வது அவரது கருத்து. அவரது சுதந்திரம். ஒரு கட்சிக்கு எப்படியும் ஒரு பொதுச்செயலாளர் வந்து தான் ஆக வேண்டும். அவர்களுடைய கட்சி உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அவர்கள் இடைக்கால பொதுச்செயலாளராக வர வேண்டும்.
அதன்பின் கட்சி தேர்தலில் தொண்டர்கள் முதல் அனைவரும் சேர்ந்து ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். திமுகவின் உட்கட்சி பூசல் குறித்து கேட்டதற்கு, அதிமுக, திமுக, காங்கிரஸ் என எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களது உட்கட்சி பிரச்சனைக்கு நாம் கருத்து எதுவும் சொல்ல முடியாது. ஆனால் அதே நேரத்தில் மாநகராட்சியை பொறுத்தவரை எல்லா பணிகளும் நடைபெற வேண்டும். அதுதான் என்னுடைய வேண்டுகோள்” என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..