(Source: ECI/ABP News/ABP Majha)
‛தீபாவளி வரை காத்திருங்கள்...’ பிரச்சாரத்தில் அன்புமணி சூசகம்!
‛நானும், மருத்துவர் அய்யாவும் எப்படி உங்களை சந்திக்க போகிறோம் என காத்திருந்தோம்....’ -அன்புமணி
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசார கூட்டம் கூட்டேரிப்பட்டு பகுதியில் நடைபெற்றது. இதில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:-
தமிழ்நாட்டை கடந்த 54 ஆண்டு காலமாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. மாறி மாறி ஆட்சி செய்தும் எந்த முன்னேற்றமும் அடையவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு தொழிற்சாலை உள்ளதா? வேலைவாய்ப்பு இல்லை. எந்த முன்னேற்றமும் அடைய வில்லை. மாவட்டத்தில் சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய், பள்ளிக்கூடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. எனவே இந்த வசதிகளை நீங்களே உருவாக்க வேண்டி உள்ளது. அதனால் தான் இந்த உள்ளாட்சி தேர்தலில் மாம்பழ சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.மாற்றத்தை கொண்டுவர வேண்டும். உள்ளாட்சியில் மாற்றத்தை கொண்டு வந்தால் தான் தமிழகத்தில் ஒரு மாற்றம் கொண்டு வர முடியும்.
வன்னியர்களுக்காக 42 ஆண்டு காலம் டாக்டர் ராமதாஸ் தளராமல் போராட்டம் நடத்தியும், சிறை சென்றும், தியாகம் செய்தும் கல்வி, வேலை வாய்ப்பில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்துள்ளார்.உங்களுக்காக தியாகம் செய்து பதவி, பொறுப்பு வேண்டாம், தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனவும் தியாகம் செய்து வரும் இந்தியாவிலேயே சிறந்த ஒரே தலைவர் டாக்டர் ராமதாஸ் தான். அவர் வன்னியர்களுக்கு மட்டுமல்ல பின்தங்கிய அனைத்து சமூகத்தினருக்காகவும் போராடி வருகிறார் என்பதை சிந்திக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் பின் தங்கிய மாவட்டம். எல்லா மக்களும் ஒரு முறை பா.ம.க.வுக்கு வாய்ப்பு கொடுங்கள் தமிழ்நாட்டில் முன்னேற்றம் கிடைக்கும். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை காட்டிலும் உள்ளாட்சி தேர்தல் தான் மிக முக்கியம். இந்த தேர்தலில் தான் அதிகாரம் உங்கள் கையில் வரும். இந்த ஊருக்கு என்னென்ன அடிப்படை வசதிகள் வேண்டும். அதை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் உங்கள் கையில் உள்ளது. ஒவ்வொரு 5 ஆண்டு காலமும் ஓட்டுப்போட்டு காத்துக் கிடந்தது போதும். மாற்றத்தை உருவாக்க வேண்டும். கிராமத்திற்கு சென்று மக்களை சந்தித்து மாற்றம் கொண்டுவர வேண்டும். தற்போது கொரோனா தொற்று காலம் என்பதால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
நானும், மருத்துவர் அய்யாவும் எப்படி உங்களை சந்திக்க போகிறோம் என காத்திருந்தோம். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் உங்களை சந்திக்க கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்ததுள்ளது. தீபாவளி முடிந்தவுடன் ஒவ்வொரு ஊராக வந்து உங்களை சந்தித்து மாற்றத்தை கொண்டுவரப் போகிறோம். விழுப்புரம் மாவட்டத்தில் பா.ம.க. மாபெரும் வெற்றி பெற வேண்டும். நீங்கள் நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வேட்பாளர்கள் பா.ம.க. வேட்பாளர்கள் தான். மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு எனது தம்பிகள், சகோதரிகள் மாம்பழ சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.