AIAMDK TVK Alliance: தவெக கூட்டணிக்கு வந்தால் பாஜக கழற்றிவிடப்படுமா? விமர்சித்த டிடிவி! தரமான பதிலடி கொடுத்த EPS
AIAMDK TVK Alliance: த.வெ.க கூட்டணிக்கு வந்தால் பா.ஜ.க கழற்றிவிடப்படும் என்ற டி.டி.வி.தினகரன் விமர்சனத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

AIAMDK TVK Alliance: த.வெ.க கூட்டணிக்கு வந்தால் பா.ஜ.க கழற்றிவிடப்படும் என்ற டி.டி.வி.தினகரன் விமர்சனத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு அதிமுக - தவெக கூட்டணி உருவாகும் என்பது தொடர்பான பேச்சுக்கள் சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற போது அங்கு தவெக கட்சிக்கொடியுடன் சிலர் காணப்பட்டனர். இதனை கண்ட எடப்பாடி பழனிசாமி, ”இப்போவே கொடி அசைத்து பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க”என்று கூறினார்.
அதேபோல், அடுத்தடுத்த கூட்டங்களிலும் தவெக கொடியுடன் தொண்டார்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இதனால் தவெக சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு கருத்தும் இதுவரை வெளியாகவில்லை. இச்சூழலில் தான் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “தவெக தலைவர் விஜய் கூட்டணிக்கு வருவார் என்றால் பாஜகவை எடப்பாடி பழனிசாமி கழற்றி விடுவார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கவா விஜய் கட்சி தொடங்கியிருக்கிறார்”என்று கூறினார்.
டிடிவி தினகரனுக்கு பதிலடி
இந்த நிலையில் தான் இன்று (அக்டோபர் 12) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரனின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ”டிடிவி தினகரன் ஒரு கட்சியா? யார் யாரோ பேசுவதை எல்லாம் கேள்வியாக கேட்காதீர்கள். வேண்டும் என்றே திட்டமிட்டு டிடிவி தினகரன் தவறான விமர்சனத்தை செய்து கொண்டிருக்கிறார். தன்னை யாரவது ஆதரிப்பார்கள் என்று நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை. அதனால் இப்படி பேசுகிறார்” என்றார்.
தவெக - அதிமுக கூட்டணி உறுதியாகுமா?
தவெக - அதிமுக கூட்டணி உறுதியாகுமா என்ற கேள்விக்கு, ”யார் எந்த கூட்டணியில் இருப்பார்கள் என்பது தேர்தல் வரும் வேளையில் தான் தெரியும். 2019 நாடாளுமன்ற தேர்தல்,2021 சட்டமன்ற தேர்தல்,2024 நாடாளுமன்ற தேர்தல் இந்த தேர்தலை எல்லாம் பாருங்கள் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தான் சில நேரங்களில் கூட்டணி வைத்துள்ளோம்.சில நேரங்களில் தேர்தல் அறிவிப்புக்கு ஒரு மாதத்திற்கு முன்பு கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து இருக்கிறோம். ஏனென்றால் அந்தந்த கட்சியும் அவர்களை வளர்க்க வேண்டும்.
கூட்டணி என்று அமைத்து விட்டால் அந்த கூட்டணிக்குள் ஒரு கட்டுப்பாடு வேண்டும். அதனால் எங்களுடன் கூட்டணியில் சேரவேண்டிய கட்சிகள் எல்லாம் சுதந்திரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. திமுக தலைமையில் இருக்கும் கூட்டணிக்கட்சிகளால் சுதந்திரமாக செயல்பட முடியாது. காங்கிரஸ் கட்சியில் பலர் இப்போதே எதிர்ப்பு கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதை பத்திரிகைகளில் பார்த்தேன். திமுக கூட்டணியில் இப்போது விரிசல் ஏற்பட்டு இருக்கிறது”என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.




















