RB UdhayKumar: கட்டபொம்மன் பிறந்த இடத்தில்தான் எட்டப்பனும் பிறக்கிறார் - கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்
அதிமுகவின் ஒற்றை தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என்று அதிமுக பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று வானகரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆர்.பி.உதயகுமார் முதல் 8 தீர்மானங்கள் குறித்து பேசினார். அதில், “உலகமே உற்று நோக்கும் வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அன்றைக்கு ராமன் முடிசூடும் போது அவருக்கு பக்க பலமாக லட்சுமணன் இருந்தார். ஆனால் இன்று எடப்பாடி ராமராக முடி சூடும் போது லட்சுமணன் இல்லை என்று கவலைப்பட தேவையில்லை. அவருக்கு பக்க பலமாக ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர்.
என்ன செய்வது கட்டபொம்மன் பிறந்த மண்ணில்தான் எட்டப்பனும் பிறக்கிறார். அப்படி இருக்கும் போது நம்முடைய எடப்பாடி பழனிசாமி அவர்கள் தன்னுடைய தலைமையில் அதிமுகவை வழி நடத்தி செல்வதை நாம் பார்க்க உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கும் சிறப்பு தீர்மானும் நிறைவேற்றப்பட்டது.
எட்டப்பன் ஓபிஎஸ்! எடப்பாடி ராமர்! ஆர்.பி. உதயகுமார் https://t.co/wupaoCQKa2 | #OPSvsEPS #AIADMK #OPanneerselvam #EdappadiPalaniswami pic.twitter.com/gv4kSqpGhd
— ABP Nadu (@abpnadu) July 11, 2022
பொதுக்குழு வழக்கும்..பிரச்னையும்..
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்துவந்த நிலையில், அக்கட்சியில் ஒற்றைத் தலைமை இருக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் காலியாக விடப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஓபிஎஸ், மற்றும் ஈபிஎஸ் ஆகியோரிடையே கடும் போட்டி எழுந்தது.
இதனையடுத்து தற்காலிகப் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக, சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23ம் தேதி தொடங்கியது. ஆனால், பொதுக்குழுத் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுவதாக கூறப்பட்டு அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அக்கூட்டத்தில், ஓபன்னீர்செல்வத்தை அதிமுகவை விட்டே நீக்கப்படலாம் என்றும், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவார் என்று பரபரப்புத் தகவல்கள் வெளியான நிலையில் எந்த முடிவும் எட்டப்படாமலேயே முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்