சொத்து வரியை திரும்ப பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் - முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை
’’பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வரை அதிமுக போராட்டம் நடத்தும், மாநில அரசும் வரியைக் குறைத்து விலையை குறைக்க வேண்டும்’’
தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று போராட்டம் நடைபெற்றது, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அதிமுக தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசைன், அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர்,முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தன் மற்றும் அதிமுக சென்னை மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
போராட்ட மேடையில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தேர்தல் நேரத்தில் சொத்து வரி உயர்த்தப்படாது என தெரிவித்து விட்டு தற்போது பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அளவிற்கு சொத்து வரியை உயர்த்தி உள்ளனர். இன்னும் கொரோனா அலை முடியவில்லை நான்காம் அலை ஜூன் மாதம் வரும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்து வரும் சூழலில் தற்போது சொத்து வரியை உயர்த்தி உள்ளனர். தேர்தல் நேரத்தில் வழங்கப்பட்ட எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சட்டிய ஓபிஎஸ் திமுக ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் அந்த ஆட்சி மக்களுக்கு எதிரகாவே நடைபெறுகிறது. தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த பின் அவர்களின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்து கொண்டு உள்ளனர். ஸ்டாலின் வந்தால் விடியல் என்று வீதி வீதியாக தெரிவித்தனர், ஆனால் மக்களுக்கு விடியல் ஏற்படவில்லை, சொத்து வரியை திமுக அரசு திரும்ப பெற வேண்டும்; இல்லையெனில் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்.
போக்குவரத்து தொழிலாளர்களின் 14வது ஊதிய குழு ஒப்பந்தை காலதாமதப்படுத்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது. பெண்களுக்கான தாலிக்கு தங்கம் திட்டம் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. வாக்களித்த மக்களின் வாழ்க்கையள வேதனையாகிவிட்டது. வாக்களித்த மக்களை ஏமாற்ற வேண்டாம். ஜனநாயகத்தை காத்து, திமுக அரசின் அராஜகத்தை ஒழிப்போம், மீண்டும் நல்லாட்சி மலர உழைப்போம் என பேசினார்.
ஆர்பாட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்
சொத்துவரி உயர்த்தியது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் செயல், மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை வரும். அதிமுக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வரை அதிமுக போராட்டம் நடத்தும், மாநில அரசும் வரியைக் குறைத்து விலையை குறைக்க வேண்டும்