AIADMK issue : கே.பி.முனுசாமி ஒரு பச்சோந்தி; பொன்னையன் உயிருக்கு ஆபத்து: புகழேந்தி பரபரப்பு பேட்டி!
AIADMK issue : பொன்னையன் உயிருக்கு ஆபத்து, அவருக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
சென்னை பசுமைவழி சாலையில் உள்ள ஓ.பி.எஸ்., இல்லத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேட்டியளித்தார். அப்பொழுது பேசிய அவர், ”அதிமுகவில் மிக மூத்தவர் பொன்னையன். பல உண்மைகளை வெளியில் பேசியிருக்கிறார். தனக்கு வரக்கூடிய மிரட்டல்களால் மாற்றிப்பேச வேண்டிய கட்டாயத்தில் பொன்னையன் இருக்கிறார். உடனடியாக பொன்னையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பொன்னையன் மேல் எடப்பாடி பழனிசாமி அணியினர் கோபமாக இருக்கின்றனர்.
அண்ணா நகர் K4 காவல் நிலைய காவலர்கள் உடனடியாக பொன்னையன் வீட்டுக்கு உரிய பாதுகாப்பை தர வேண்டும். எம்.பி., சீட்டுக்காக அலைந்தவர் கோகுல இந்திரா. எம்.பி., சீட்டுக்காக கேக் ஊட்டியவர் கோகுல இந்திரா. ஜெயலலிதாவால் தூரமாக தூக்கி எறியப்பட்ட பச்சைத் துரோகி தான் கே.பி.முனுசாமி., அவரை பற்றி பொன்னையன் விரிவாக பேசிவிட்டார்.
22 எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு சென்று எடப்பாடி பழனிசாமியை மிரட்டி தான் ராஜ்யசபா எம்.பி., பதவியை பெற்றார் சி.வி.சண்முகம். சாதி வெறிதான் தற்போது அதிமுகவை ஆட்டிப்படைக்கிறது. கே.பி.முனுசாமி ஒரு பச்சோந்தி. ஓ.பி.எஸ்.சின் தர்மயுத்தம் இல்லையென்றால் கே.பி.முனுசாமி காணாமல் போயிருப்பார்” என்று தெரிவித்தார்.
வாயில் வந்ததெல்லாம் பேசுவதற்கு பெயர் பொதுக்குழுவா?
ஓ.பன்னீர்செல்வம் என்ன துரோகம் செய்துவிட்டார் என்று விளக்க வேண்டும். தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, தளவாய் சுந்தரம் ஆகிய சிலர் பற்றியே பொன்னையன் பேசியுள்ளார். ஜெயலலிதா இருந்த பொதுச்செயலாளர் பதவியில் வேறு யாரும் அமரக்கூடாது என்று தான் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இன்று எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகி உள்ளார்.
இது நியாயமா?
ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் சென்ற போது அவருடன் வந்த அனைவருமே கட்சியினர் தான். ஆனால் ஏற்கனவே கட்சி அலுவலகத்தில் ரவுடிகளை குவித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. போலீஸ் இல்லாவிட்டால் அதிமுக அலுவலகத்தில் பல கொலைகள் நடந்திருக்கும். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராவது நாட்டுக்கு மிக அவசியமானதா?
என்ன அவசரம் அப்படி?
நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்து போட்டு, முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளை விட்டுத்தந்து, சொந்தத்தம்பியை கட்சியில் இருந்து நீக்கியதைக் காட்டிலும் ஓ.பி.எஸ்., வேறு என்ன தியாகம் செய்ய வேண்டும்? என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்