(Source: ECI/ABP News/ABP Majha)
OPS vs EPS: சொன்னதை செய்த ஓபிஎஸ்; முடிந்ததா எடப்பாடி கனவு...? - ஒரே போடாக போட்ட நீதிமன்றம்
AIADMK General Council Meeting:பரபரப்பான சூழ்நிலையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட இருக்கிறது. இதில் ஓபிஎஸ் பங்கேற்பார் என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
பரபரப்பான சூழ்நிலையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட இருக்கிறது. இதில் ஓபிஎஸ் பங்கேற்பார் என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் உச்சகட்ட சலசலப்புகள் நிலவி வருகிறது. எடப்பாடிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் ஒரு பனிப்போரே நடந்து வருகிறது. அதிமுகவில் ஜெயலலிதா காலத்தில் இருந்தே நம்பிக்கை நாயகனாக திகழ்ந்தவர் ஓபிஎஸ். ஆனால் அவரது மறைவுக்கு பிறகு சசிகலாவின் எதிர்ப்பால் பன்னீர்செல்வத்தின் அதிகாரம் குறைந்து கொண்டே வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச்செயலாளர்கள் பெரும்பாலானோரின் ஆதரவு சசிகலாவால் கை காட்டிவிடப்பட்ட எடப்பாடிக்கே இருக்கிறது. அதற்கு காரணம் சசிகலா மீதான எடப்பாடியின் எதிர்ப்பாகவே இருக்கலாம்.
இதனால் எப்படியாவது ஒற்றைத்தலைமை கைப்பற்றி விட வேண்டும் ஒற்றை இலக்கோடு இபிஎஸ் வீறுநடை போட்டு வந்தார். ஆனால் அவரின் கனவுக்கும் செயலுக்கும் ஓபிஎஸ் முட்டுக்கட்டை போட்டுள்ளார். பலமுறை விட்டுக்கொடுத்தாச்சு... இனி வாய்ப்பே இல்லை என்று ஒபிஎஸ் திட்டவட்டமாக விடாப்பிடியாய் நின்றார். முன்னாள் அமைச்சர்களும் ஓபிஎஸ்சை சமாதானப்படுத்த நடையாய் நடந்தனர். ஆனால் நோ மீன்ஸ் நோ என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டார் ஓபிஎஸ்.
என்னை தாண்டி... என்ற அஜித் வசனத்திற்கு ஏற்றார் போல தன் எதிர்ப்பை மீறி ஒற்றைத்தலைமை தீர்மானம் நிறைவேற்றினால் நீதிமன்றம் செல்வேன் என ஓபிஎஸ் தடலடியாக சொல்லியிருந்தார். ஆனால் அவர் நீதிமன்றம் போனால் போகட்டும். நான் சந்திக்கத் தயார் என இபிஎஸ் சூளுரைத்தார்.
இதையடுத்து அதிமுக பொதுக்குழுவில் பொதுக்குழு உறுப்பினர்களை வைத்து நினைத்தப்படி ஒற்றைத்தலைமையாக வேண்டும் என எடப்பாடி நினைத்திருந்தார். அதன்படி இன்று பொதுக்குழுவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் இந்த முறை சுதாரித்துக்கொண்ட ஓபிஎஸ் பொதுக்குழு நடக்கட்டும். ஆனால் என் பார்வைக்கு வந்த 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்த புதிய தீர்மானங்களையும் நிறைவேற்றக்கூடாது என சொன்னபடி நீதிமன்றம் சென்றுவிட்டார் ஓபிஎஸ்.
ஆனால் 3 மணிநேரம் நேரம் நடந்த காரசார விவாதத்திற்கு பிறகு ஓபிஎஸ்க்கு ஏமாற்றமே மிஞ்சியது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பொதுக்குழு நடத்தலாம். தீர்மானங்கள் நடத்த எந்த தடையும் இல்லை என உத்தரவிட்டிருந்தார். இதனால் இபிஎஸ் தரப்பு மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். எப்படியும் நமக்கு வரணும்னு நெனைச்சது வந்துடும் என்ற எண்ணத்தில் புஸ்வானத்தை பற்ற வைத்தார் பன்னீர்செல்வம்.
அதாவது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். இரவோடு இரவாக 4 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாகவே நடந்தது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; மீண்டும் தர்மமே வெல்லும் என்ற பழமொழியை ஓபிஎஸ் அடிக்கடி உபயோகிப்பார். அதன்படியே தற்போது தீர்ப்பு அமைந்துள்ளது. தீர்ப்பில், பொதுக்குழு நடத்திக்கொள்ளலாம். ஆனால் 23 தீர்மானங்களைத் தவிர ஒற்றைத்தலைமை உள்ளிட்ட எந்த புதிய தீர்மானங்களையும் நிறைவேற்றக்கூடாது என்ற ஓபிஎஸ் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர். இதனால் இபிஎஸ் தரப்பு சற்று கலக்கத்தில் உள்ளது. இதுகுறித்து பேசிய பன்னீர்செல்வத்தின் மகனும், எம்பியுமான ரவீந்திரநாத் “இந்த தீர்ப்பு அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பம்” எனத் தெரிவித்தார்.
அதேபோல் தீர்ப்புக்கு பின்னர் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரனான வைத்தியலிங்கம் பொதுக்குழுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பங்கேற்பார் எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தீர்ப்பு வெளியாடியிருந்தாலும் ஒற்றைத்தலைமையில் மாற்றமில்லை என முன்னாள அமைச்சரும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனால் பொதுக்குழுவில் எடப்பாடியின் நிலைப்பாடு என்ன? ஒபிஎஸ் தரப்பின் நடவடிக்கைகள் என்ன என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.