(Source: ECI/ABP News/ABP Majha)
உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆலோசனை!
உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதித்த பின், எஸ்.பி.வேலுமணி விவகாரம் தொடர்பாகவும் ஆலோசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதித்த பின், எஸ்.பி.வேலுமணி விவகாரம் தொடர்பாகவும் ஆலோசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த 8ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் திமுக 100 சதவீதம் வெற்றி பெற உழைக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
நடத்தப்படாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தல்
2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டு, மனுத்தாக்கல் முடிந்து, வேட்புமனு பரிசீலனையும் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், பெண்கள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்ற காரணத்தை காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை விதிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு நிர்வகிப்பதற்கான சட்டவரைவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு தனி அலுவலர்கள் நியமனம், 6 மாதங்களுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது.
இது தொடர்பான வழக்குகள் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தநிலையில், தமிழகத்தில் நகர்புற பகுதிகளை தவிர்த்து ஊரக பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டும், நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியும், வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் இந்த 9 மாவட்டங்களில் இருக்கும் ஊரக பகுதிகளில் வார்டு மறுவரை முடியாததால் இந்த மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையெடுத்து ஊரகப்பகுதிகளில் மட்டும் கடந்த 2019 ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரை, கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தலானது நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக 2019ஆம் ஆண்டில் ஊரக பகுதிகளில் மட்டும் நடைபெற்றது. இருப்பினும் தமிழகத்தில் புதியதாக பிரித்து உருவாக்கப்பட்ட மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் வார்டு எல்லைகள் முழுமையாக வரையறுக்கப்படாததால், இந்த 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலானது நடத்தப்படவில்லை. எனவே வரும் டிசம்பர் மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள எல்லா மாவட்டங்களிலும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலும், விடுபட்டுபோன 9 மாவட்டங்களில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுடன் ஊரக உள்ளாட்சித் தேர்தலும் நடத்தப்படும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.
TN Local Body Election: 'உள்ளாட்சித் தேர்தல்’ தனித்து போட்டியிட பாஜக திட்டம்..?