AIADMK: ஏப்ரல் 7-ஆம் தேதி நடக்கவிருந்த செயற்குழு கூட்டம் ரத்து.. அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு...
அதிமுகவின் பொதுச்செயலாளராக கடந்த சில நாட்களுக்கு எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.இதனைத் தொடர்ந்து அதிமுகவின் செயற்குழு கூட்டம் வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
அதிமுக செயற்குழு கூட்டம் ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக கடந்த சில நாட்களுக்கு எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் அதிமுக தலைமைக் கழகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.
இக்கூட்டத்தில், கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் அதீத கவனம் பெற்றிருந்தது.
இந்நிலையில் ஒரு சில காரணங்களால் அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏப்ரல் 7 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பின்பு அது ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக செயற்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக மேல்முறையீட்டு வழக்கு
கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனைத் எதிர்த்து உயர்நீதிமன்றத்தை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை நாடிய ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு எதிராகவே தீர்ப்பு அமைந்தது. ஆனால் அந்த தீர்ப்பில் ஆனால் தீர்ப்பில் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து குறிப்பிடப்படாமல் இருந்தது, இதனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். அதேசமயம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியானது.
இதனை எதிர்த்தும் ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.இந்த 2 வழக்கையும் விசாரித்த தனி நீதிபதி குமரேஷ் பாபு ஓபிஸ் தரப்பு மனுக்களை தள்ளுபடி செய்தார். இந்த தீர்ப்பு வெளியானதும் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்தது.இதன் இறுதி விசாரணை ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக செயல்பட தடைவிதிக்கக்கோரி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அமர்வு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.