AIADMK Meeting: டிச. 27-இல், ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..
AIADMK District Secretary Meeting: இக்கூட்டத்தில் பங்கேற்க தலைமைக் கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் வரும் 27ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்க தலைமைக் கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்காலப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழகம், எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 27.12.2022 - செவ்வாய்க் கிழமை காலை 10 மணிக்கு, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக செய்தித் தொடர்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் இரட்டைத் தலைமை பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தின் முடிவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்பொதுக்குழுவுக்கு எதிராக, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் ஆதராவாளர்களை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். தனக்கு ஆதரவாக இருக்கும் நிர்வாகிகளையும் எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்தார்.
இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியாக மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்தார். ஒன்றிய செயலாளர்களும் நியமிக்கப்பட்டனர். அதன்படி தமிழகம் முழுவதும் தங்கள் ஆதரவாளர்களை பொறுப்பாளர்களாக ஓபிஎஸ் நியமித்துள்ளார். கட்சியில் 75 மாவட்டங்கள் இருந்தன. அதில் சில மாவட்டங்களை பிரித்து அமைப்பு ரீதியாக 88 மாவட்டங்களை உருவாக்கி அதற்கு மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்தார். இதுமட்டுமின்றி தலைமை கழக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து நியமிக்கப்பட்ட புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் நாளை கூட்ட உள்ளார். சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் காலை 10 மணியளவில் கூட்டம் நடைபெற உள்ளது. நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பின்பு, செய்தியாளர்களை சந்திக்கும் ஓபிஎஸ், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பற்றிய அறிவிப்புகளை தெரிவிக்க உள்ளார்.