"அய்யா காப்பாத்துங்க" கூட இருக்கிறவங்க துரோகம் பண்றாங்க.. நீச்சல் வீடியோ பின்னணி என்ன ?
பாமக நிறுவனர் ராமதாஸ் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ வெளியாகிய நிலையில், பாமகவினர் அதற்கு எதிராக கொந்தளித்துள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கிடையே கருத்து வேறுபாடு, அக்காட்சியில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், கடந்த மாதம் அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவியில் இருந்து, நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தது கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் மே பதினொன்றாம் தேதி நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு அனைத்து பிரச்சனையும், சரியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த மாநாட்டிற்கான வேலைகளை அன்புமணி ராமதாஸ் செய்திருந்தார். அந்த மாநாடு பாமகவின் வெற்றி மாநாடாக பார்க்கப்படுகிறது. ஆனால் மாநாட்டை சிறப்பாக நடத்திய அன்புமணியை பாராட்டாமல், வேறு சிலரை பாராட்டிய ராமதாஸ், கட்சியினரை கடலில் தூக்கி வீசிவிடுவேன் எனவும், பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆலோசனைக் கூட்டங்கள்
இதனைத் தொடர்ந்து மாநாடு முடிந்த பிறகு ஆலோசனைக் கூட்டம் குறித்த அறிவிப்பை ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை ராமதாஸ் கூட்டிய போதும், 18 மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களை கலந்து கொண்டனர். 200 மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள், ராமதாஸின் கூட்டத்தை புறக்கணித்தனர். இதே நிலைதான் ராமதாஸ் கூட்டிய அடுத்தடுத்த மகளிர் அணி கூட்டம், இளைஞர் அணி கூட்டம் ஆகிய ஆலோசனை கூட்டத்திலும் எதிரொலித்தது.
நீச்சல் குளத்தில் ராமதாஸ்
இந்தநிலையில் நேற்று ராமதாஸ் நீச்சல் குளத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ, வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைத்தளத்தில் பிற கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், இந்த வீடியோவை கவுண்டமணி காமெடியுடன் இணைத்து கிண்டல் அடித்து வருகின்றனர்.
இந்த வீடியோ பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டவர்களுக்கு எதிராக பாமகவினர் சமூக வலைதளத்தில், பதிவு செய்து வருவதையும் பார்க்க முடிகிறது. இதுகுறித்து பாமகவினரிடம் பேசினோம், " ஏற்கனவே மருத்துவர் அய்யாவை ஒரு கும்பல் தவறாக வழி நடத்தி வருகிறது. அவரது முதுமையை பயன்படுத்தி, தலைவரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் போட்டு கொடுத்து விட்டார்கள். இதனாலே, அவர் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார்.
இந்தநிலையில், தேவையில்லாத இந்த வீடியோவை ஒரு கும்பல் வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் அந்த கும்பல் ஆதாயம் பெற முயற்சி செய்து வருகிறது. பதவி ஆசைக்காக அய்யாவை இப்படி தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவரிடம் இருக்கும் துரோக கும்பலை அவர் அடையாளம் கண்டு அங்கிருந்து வெளியேற வேண்டும். அண்ணன் இதுவரை அய்யாவை எதிர்த்து எங்கும் பேசியதில்லை. மாநாடு கூட அய்யாவை கவுரவப்படுத்தும், விதமாகவே அமைந்திருந்தது. எனவே, அண்ணன் ஐயாவை தன்னுடன் வைத்துக் கொள்ளும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்" என பாட்டாளிகள் குமுறுகின்றனர்.





















