ADMK vs PMK: பலாப்பழத்துக்கு மல்லுகட்டும் அதிமுக - பாமக! எடப்பாடி பழனிசாமியின் முடிவு என்ன?
சட்டமன்ற தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட அதிமுக - பாமக ஆகிய இரு கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இன்னும் 4 மாத காலத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விசிக என பலமிகுந்த கூட்டணியை திமுக அமைத்துள்ளது. அதேசமயம், அதிமுக தங்கள் கூட்டணியில் பாஜக, பாமக ஆகியோருடன் களமிறங்குகிறது.
பண்ருட்டி தொகுதி:
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக - பாஜக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக இணைந்துள்ளது. தேர்தலுக்கு மிக குறைவான காலகட்டமே இருப்பதால் தொகுதி பங்கீடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பண்ருட்டி பலாப்பழம் என்றால் தமிழ்நாடு முழுவதும் பிரபலம் ஆகும். இந்த பகுதியில் பலாப்பழ விவசாயிகள் அதிகளவு உள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியை கைப்பற்ற அதிமுக - பாமக ஆகிய இரு கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பண்ருட்டி தொகுதி எப்போதும் ஒரு விஐபி தொகுதியாகவே இருந்து வருகிறது. பண்ருட்டி ராமச்சந்திரன், வேல்முருகன் ஆகியோர் வெற்றி பெற்ற தொகுதி இதுவாகும்.
அதிமுக - பாமக மல்லுகட்டு:
வரும் சட்டமன்ற தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட அதிமுகவின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான எம்சி சம்பத் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். அவரது சொந்த ஊரான குமாரமங்கலம் பண்ருட்டி தொகுதியிலே அமைந்துள்ளது. கடலூர் தொகுதியிலும் போட்டியிட அவர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தாலும், பண்ருட்டி தொகுதியிலும் போட்டியிட அவர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சர், அதிமுக மாவட்டச் செயலாளரான அவர் கடந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் தோல்வியடைந்த நிலையில் இந்த முறை பண்ருட்டி தொகுதியில் களமிறங்க ஆர்வம் காட்டி வருகிறார்.
கட்டாயத்தில் அன்புமணி:
மற்றொரு பக்கம் வன்னிய சமுதாய வாக்குகள் அதிகம் நிறைந்த தொகுதி என்பதால் அன்புமணி தரப்பினரும் இந்த தொகுதியை கைப்பற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர். ராமதாசுடனான பஞ்சாயத்திற்கு மத்தியில் தேர்தல் களத்தை எதிர்கொள்ளும் அன்புமணி இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதன்மூலம் கட்சியை நிரந்தரமாக தான் கைப்பற்ற அவர் வியூகம் வகுத்து வருகிறார்.
இதனால், அவர் வன்னிய சமுதாய வாக்குகள் அதிகம் உள்ள தொகுதிகளாகவே குறிவைத்து தொகுதிகளை அதிமுக-விடம் கேட்க முடிவு செய்துள்ளார். இதனால், வன்னிய சமுதாய வாக்குகள் அதிகம் நிறைந்த பண்ருட்டி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அன்புமணி தரப்பினர் அதிமுக-வை வலியுறுத்தி வருகின்றனர்.
யாருக்கு செல்வாக்கு?
பண்ருட்டி தொகுதி தற்போது தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வசம் உள்ளது. அவருக்கு தொகுதியில் ஓரளவு செல்வாக்கு இருப்பதாலும், அவர் ஆளுங்கட்சியான திமுக-வுடன் கூட்டணியில் இருப்பதாலும் அவரை எதிர்த்து வலுவான போட்டியாளரை நிறுத்தவே அதிமுக விரும்பும்.
இதனால், இந்த முறை பண்ருட்டி தொகுதியை யார் கைப்பற்றுவது என்பதில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக - பாமக கூட்டணிக்குள் மோதல் உருவாகத் தொடங்கியுள்ளது. இந்த தொகுதியில் கடந்த 1996ம் ஆண்டு டாக்டர் ராமசாமி, 2001ம் ஆண்டு வேல்முருகன், 2006் ஆண்டு வேல்முருகன், 2011ல் சிவக்கொழுந்து, 2016ம் ண்டு சத்யா பன்னீர்செல்வம், 2021ல் வேல்முருகன் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றுள்ளனர்.
திமுக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பிய இந்த தொகுதியில், கடந்த கால வரலாறுகளை எடுத்துப் பார்க்கும்போது வேல்முருகன் செல்வாக்கு மிகுந்தவராக காணப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





















