Sengottaiyan: ”டிடிவி தினகரனை சந்தித்தேனா? சென்னைக்கு எதுக்கு வந்தேன் தெரியுமா?” ஓபனாக சொன்ன செங்கோட்டையன்!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்திக்கவே இல்லை என்று கூறியுள்ளார் செங்கோட்டையன்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியான நிலையில், அந்த தகவலை மறுத்திருக்கும் செங்கோட்டையன் அவரை சந்திக்கவே இல்லை என்று தெளிவு படுத்தியுள்ளார்.
அதிமுக விவகாரம் :
கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் தேசிய ஜனநாயக கூட்டணியிலும் ஏதாவது ஒரு புதுபுது பிரச்சனை வந்துகொண்டு இருக்கிறது. அண்மையில் ஓ.பன்னீர் செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் எங்களுக்கு மரியாதை இல்லை அதனால் அந்த கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஓ.பன்னீர் செல்வத்தை தொடர்ந்து நாங்களும் அந்த கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்று அறிவித்தார்.
அதேபோல், என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை மாற்றி விட்டு வேறு ஒருவர் அறிவித்தல் மீண்டும் அந்த கூட்டணியில் இணைய தயாராக உள்ளோம் என்று அறிவித்தார். கூட்டணி தான் இப்படி இருக்கிறது என்றால் மறுபுறம் அதிமுக கட்சிக்குள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி வருகிறார்.
இச்சூழலில் தான் இன்று (செப்டம்பர் 24) அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது. அதோடு இரண்டு பேரும் சுமார் ஒரு மணி நேரம் பேசியதாகவும் செய்திகள் வெளியாகியது. அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இருவரும் கலந்து ஆலோசனை செய்ததாகவும் கூறப்பட்டது.
மறுத்த செங்கோட்டையன்:
இச்சூழலில் தான் செங்கோட்டையன் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், “என் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்க்க மட்டுமே சென்னை வந்துள்ளேன். மற்றபடி யாரையும் நான் சந்திக்கவில்லை. அனைவரும் ஒருங்கிணைந்து அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்”என்றார். மேலும், “எல்லாம் நல்லதே நடக்கும் என்றே நினைக்கிறேன். கட்சியை ஒருங்கிணைக்க நான் முயற்சி செய்கிறேன். பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். நான் அமைதியாக இருக்கிறேன். நல்லது நடந்தால் தொண்டருக்கும் மகிழ்ச்சி, மக்களுக்கும் மகிழ்ச்சி" என்று கூறியுள்ளார். இதன் மூலம் அவர் டிடிவி தினகரனை சந்திக்கவில்லை என்பதை விளக்கியுள்ளார்.





















