OPS INTERVIEW : "சதி செய்தவர்களுக்கு மக்களே தண்டனை வழங்குவார்கள்" - ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
அ.தி.மு.க.வில் சதி செய்தவர்களுக்கு அம்மாவின் தொண்டர்கள் விரைவில் தண்டனை வழங்குவார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் வலுத்துள்ளது. கடந்த 23-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் பாதியிலே வெளியேறினர். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கட்சியின் ஒற்றைத் தலைமை எடப்பாடி பழனிசாமி என்று புகழாரம் சூடினர்.
இந்த நிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் வேட்புமனுத்தாக்கல் நிகழ்வில் பங்கேற்ற பிறகு டெல்லியில் இருந்து சென்னை வழியாக மதுரை வந்த ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பேசிதயாவது, “ அ.தி.மு.க. தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர். தொண்டர்களுக்காகவே நான் இருப்பேன். இந்த அசாதாரண சூழல் யாரால் எப்படி ஏற்பட்டது? எவரால் இந்த சதிவலை பின்னப்பட்டது?
அவர்களுக்கு கூடிய விரைவில் அம்மாவின் தொண்டர்கள் உறுதியாக உரிய பாடத்தை, தண்டனையை வழங்குவார்கள் என்று கூறுகிறேன். ஓ.பன்னீர்செல்வம் போன்ற தொண்டன் கிடைத்தது என் பாக்கியம் என ஜெயலலிதா சான்றிதழ் அளித்துள்ளார். அனைத்து சிக்கலும் விரைவில் தீரும். சிக்கலுக்கு காரணம் யார் என்பதும் எனக்குத் தெரியும்” இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, ஒற்றைத் தலைமை விவகாரத்தை தொடர்ந்து வலியுறுத்தி பொதுக்குழுவில் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். அவரது தேர்வுக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், தீர்மானங்கள் நிராகரிப்பு செய்வதாக கூறியதுடன் கட்சியில் இரட்டைத் தலைமையால் பின்னடைவு ஏற்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
மேலும், நேற்று முன்தினம் கட்சியில் இரட்டைத் தலைமை பதவி காலாவதியாகிவிட்டதாகவும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இனி பொருளாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளராக செயல்படுவார் என்றும் கூறினார். மேலும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பலரும் திட்டமிட்டபடி பொதுக்குழு வரும் ஜூலை 11-ந் தேதி நடக்கும் என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையேற்பார் என்றும் கூறியுள்ளனர்.
இந்த சூழலில், ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வைப் பலப்படுத்த சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், சசிகலாவும் தனது ஆதரவாளர்களை தமிழ்நாடு முழுவதும் சந்திப்பதற்காக புரட்சிப்பயணம் என்ற பெயரில் அரசியல் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்