120 தொகுதிகளில் இபிஎஸ் போட்டியிட விருப்ப மனு.! ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த கஜேந்திரன் யார்.?
தமிழக சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பெயரில் 120 தொகுதிகளுக்கு 18 லட்சம் ரூபாய் செலவு செய்து அதிமுக ஒன்றிய செயலாளர் ஒருவர் விருப்பு மனுக்களை தாக்கல் செய்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிமுகவில் விருப்ப மனு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 முதல் 4 மாத காலமே உள்ளது. இதனையடுத்து தேர்தலுக்கான பணிகளை திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் கடந்த 15ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. விருப்ப மனு கட்டணமாக ஒரு தொகுதிக்கு ரூ. 15ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தினந்தோறும் பல ஆயிரம் பேர் ஆர்வத்துடன் வந்து விருப்ப மனுவை தாக்கல் செய்து வருகிறார்கள். இதன் காரணமாக அதிமுக அலுவலகம் அமைந்துள்ள சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் போக்குவரத்து நெரிசலால் சிக்கி திணறி வருகிறது. இன்றோடு விருப்ப மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் போட்டி போட்டு பலரும் விருப்ப மனுவை தாக்கல் செய்து வருகிறார்கள்.
18 லட்சம் ரூபாயை அள்ளிக்கொடுத்த நிர்வாகி
இந்த நிலையில் விருப்ப மனு தாக்கலின் போது நடைபெற்ற ஒரு ருசிகர சம்பவம் அனைவரையும் திருப்பி பார்க்கவைத்துள்ளது. அதிமுக நிர்வாகி ஒருவர் 120 தொகுதிகளிலும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கான கட்டணமான 18 லட்சம் ரூபாயையும் காசோலையாக அளித்துள்ளார். ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியைச் சேர்ந்த, தெற்கு ஒன்றியச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், எடப்பாடி பழனிசாமி 120 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என ஒரு தொகுதிக்கு ரூ.15 ஆயிரம் என 120 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.18 லட்சத்துக்கான வரைவோலை செலுத்தி, அவருக்காக விருப்ப மனு அளித்தார்.
யார் இந்த கஜேந்திரன்.?
தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி கட்சிகள் உட்பட அனைவரும் வெற்றி பெற்று குறிப்பாக அதிமுக மட்டும் 120 தொகுதிகள் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாக கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பல ஆண்டுகாலமாக இருந்து வரும் கஜேந்திரன், ஆரணி சட்டமன்ற தொகுதி ஆரணி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, கஜேந்திரனுக்கு இளைஞர் பாசறை பொறுப்பை வழங்கியிருந்தார். கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது 2026ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்பமனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





















