Edappadi Palanisamy: சும்மா வார்த்தை ஜாலம்.. கடன் வாங்கி தான் ஆட்சி நடக்குது - பட்ஜெட்டை விமர்சித்த இபிஎஸ்
தமிழ்நாட்டில் திமுக அரசு கடந்த 2021 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றது. அந்த அரசு 4வது முறையாக பொது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
![Edappadi Palanisamy: சும்மா வார்த்தை ஜாலம்.. கடன் வாங்கி தான் ஆட்சி நடக்குது - பட்ஜெட்டை விமர்சித்த இபிஎஸ் admk edappadi palanisamy comment about tn budget 2024 Edappadi Palanisamy: சும்மா வார்த்தை ஜாலம்.. கடன் வாங்கி தான் ஆட்சி நடக்குது - பட்ஜெட்டை விமர்சித்த இபிஎஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/19/393802649579b274cf7edaa296e29c571708340984169572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட்டில் வார்த்தை ஜாலம் தான் அதிகம் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக அரசு கடந்த 2021 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றது. அந்த அரசு 4வது முறையாக பொது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருந்த நிலையில், தற்போது தங்கம் தென்னரசு நிதியமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவர் 2024-25 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இது அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்டாகும்.
இன்றைய பட்ஜெட்டில் 3 ஆம் பாலினத்தவர்களுக்கான உயர்கல்வி செலவை அரசே ஏற்கும், அரசு பள்ளிகளில் படித்து கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு உதவித்தொகை, வடசென்னை வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தது. தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டுக்கு பாராட்டுகளும், விமர்சனங்களும் குவிந்து வருகிறது. இப்படியான நிலையில் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “விடியா திமுக அரசின் பட்ஜெட் 4வது முறையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் வார்த்தை ஜாலம் தான் அதிகம் காணப்படுகிறது.தமிழ்நாடு பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்கள் என்பது இல்லை. திமுக அரசு வழக்கம்போல ஒவ்வொரு துறைக்கு நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த ஆட்சியில் தான் தமிழகத்தில் கடன் உயர்ந்துள்ளது. மேலும் வரவு, செலவு திட்டத்திலும் குளறுபடி உள்ளது. திமுக அரசு ரூ.8 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது. கடன் பெற்று தான் ஆட்சியை நடத்துகின்றனர்.
பட்ஜெட்டில் எந்தவொரு புதிய திட்டமும் இல்லை. பெரிய திட்டமும் இல்லை. திமுக அரசின் கனவு பட்ஜெட் என்பது கானல் நீர் போன்றதுல். அது மக்களுக்கு எந்தளவும் பயன் தராது. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை எல்லாம் நிறுத்தி விட்டு புதுமைப்பெண், உரிமைத் தொகை திட்டம் கொண்டு வந்துள்ளனர். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. அதிமுக ஆட்சியை விட திமுக அரசு காலத்தில் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. ஆட்சி வருவதற்கு முன் அதிமுக அரசு கடன் வாங்கி கடனாளி மாநிலத்தை தமிழகத்தை ஆக்கி விட்டதாக சொன்னார்கள். ஆனால் இப்போது கடன் வாங்கி தான் ஆட்சியே நடக்கிறது” என தெரிவித்தார்.
மேலும் படிக்க: CM Stalin: "கனவு மட்டுமல்ல; நனவாகப் போகும் கனவு" - தமிழ்நாடு பட்ஜெட் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)